தடைகள் தீர்வாகாது.. வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: சீனா கருத்து
வடகொரியா மீது ஐநா சபை கடும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நிலையில், தடைகள் மட்டுமே இறுதித் தீர்வாகாது என்று சீனா கருத்து தெரிவித்துள்ளது.
உலக நாடுகளின் எதிர்ப்புகள் மற்றும் ஐநா சபையின் கட்டுப்பாடுகளை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகின்றது. குறிப்பாக கடந்த மாதம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை இரண்டு முறை பரிசோதித்துள்ளது. இதையடுத்து, வடகொரியா மீது கடும் பொருளாதார தடைகள் விதிக்கும் வரைவு அறிக்கையை அமெரிக்கா ஐநா சபையில் தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கைக்கு ஐநா சபையும் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. 2006 ஆம் ஆண்டுக்குப் பின் வடகொரியா மீது கொண்டு வரப்படும் 7-வது தடை இதுவாகும்.
இந்நிலையில், வடகொரியா மீது பொருளாதார தடைகள் விதிப்பது மட்டுமே இறுதித் தீர்வாகாது எனவும், ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடத்துவதன் மூலம் பிரச்னைகளை தீர்க்க முடியும் எனவும் சீன வெளியுறவு அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது. வடகொரியா மீது பொருளாதார தடைகள் விதித்ததற்கு பெரிய அளவிலான ஆதரவை சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.