ஊழல் வழக்கில் ரூ.336 கோடி லஞ்சம்.. சீனா Ex அமைச்சருக்கு மரண தண்டனை!
ஊழல் வழக்கில், சீனாவின் முன்னாள் அமைச்சர் டாங் ரெஞ்சியனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் முன்னாள் வேளாண்மை மற்றும் கிராமப்புற விவகாரத் துறை அமைச்சர் டாங் ரெஞ்சியன் (63). இவர் தனது பதவிக் காலத்தில் பல்வேறு திட்டங்களை ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது அரசின் திட்டங்களைப் பணத்தை வாங்கிக்கொண்டு பயனாளிகளுக்கு ஒதுக்கியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கு ஜிலின் மாகாணம் சாங்சுன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில் நலத்திட்டங்களை ஒதுக்குவதற்காக பயனாளிகளிடம் இருந்து சுமார் 38 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.336 கோடி) வரை லஞ்சம் பெற்றது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், நாட்டையே உலுக்கிய இந்த ஊழல் வழக்கில், டாங் ரெஞ்சியனுக்கு கோர்ட் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. மேலும் அந்த தொகையை அவரிடம் இருந்து கைப்பற்றி தேசிய கருவூலத்துக்கு மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு அதிபர் ஜி ஜின்பிங் ஆட்சிக்கு வந்த பிறகு, ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி (CPC) மேற்கொண்ட மிகப்பெரிய ஊழல் எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சீன அதிகாரிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர் அல்லது ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதில் டஜன் கணக்கான உயர் ராணுவ அதிகாரிகளும் அடங்குவர். முன்னதாக, கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஊழல் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்று அதிபர் ஜின்பிங் பலமுறை எச்சரித்து வருகிறார். கட்சியின் அதிகாரத்தைத் தக்கவைக்க அதை ஒழிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில்தான் சீனாவின் முன்னாள் அமைச்சர் டாங் ரெஞ்சியனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.