1.5 பில்லியன் டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்யும் செல்போன் நிறுவனங்கள்!!
கொரோனா அச்சுறுத்தல் மற்றும் அமெரிக்கா - சீனாவுக்கு இடையேயான மோதல் போக்கை தொடர்ந்து சீனாவிலிருந்து தங்களது உற்பத்தி தலைமையிடங்களை தெற்காசிய நாடுகளுக்கு மாற்றுவதற்கான முயற்சிகளை பல துறைகளை சார்ந்த உற்பத்தி நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.
அப்படி சீனாவிலிருந்து விலகி மாற்று இடங்களுக்கு புலம் பெயர விரும்பும் நிறுவனங்களை கவர்ந்திழுக்கும் வகையில் இந்தியாவில் தொழில்துறை முதலீடு மற்றும் உற்பத்தியை அதிகரிக்க வேண்டி மத்திய அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
PLI எனப்படும் உற்பத்தியுடன் அடிப்படையிலான ஊக்குவிப்பு தொகை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தவும் அது தான் காரணம்.
அதன் பலனாக சாம்சங், பாக்ஸ்கான், விஸ்டரான், பெகட்ரான், லாவா, டிக்சான், மைக்ரோமேக்ஸ் என சுமார் 22 நிறுவனங்கள் செல்போன் நிறுவனங்களுக்கு தேவையான செல்போன் மற்றும் அதற்கான உதிரிபாகத்தினை இந்த திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்ய விரும்புகின்றன. இதில் வெளிநாட்டு நிறுவனங்களும் அடங்கியுள்ளன. இதன் மூலம் சுமார் 1.5 பில்லியன் டாலர்களை இந்த செல்போன் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதே போல மருந்து உற்பத்தி, வாகன உற்பத்தி, ஆடை உற்பத்தி என பல துறை உற்பத்திகளை ஈர்க்கவும் அரசு முயன்று வருகிறது.
இருப்பினும் யு.எஸ். ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு நிறுவனம் சமீபத்தில் மேற்கொண்ட சர்வே அடிப்படையில் வியட்நாம், கம்போடியா, மியான்மர், பங்களாதேஷ் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் பக்கம் தான் உற்பத்தியாளர்களின் பார்வை திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளது.
‘இந்தியாவில் உற்பத்தி நிறுவங்னங்களின் முதலீடுகள் அடுத்து வரும் நாட்களில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த திட்டங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிகரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளன’ என மும்பையை சேர்ந்த பொருளாதார நிபுணர் கவுசிக் தாஸ் தெரிவித்துள்ளார்.
‘இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க ஊக்க தொகை திட்டங்களை அறிவித்திருப்பது மேக் இன் இந்தியாவுக்கு கிடைத்த பெரிய வெற்றி’ என போஃபா செக்யூரிட்டிஸின் ஆய்வாளர் அமிஷ் ஷா தெரிவித்துள்ளார்.