சீனா வெளியிட்ட புதிய வரைபடத்தில் அப்படி என்னதான் சிக்கல்?-இந்தியாவை தாண்டி பல நாடுகள் எதிர்ப்பதுஏன்?

சீனா வெளியிட்டிருக்கும் புதிய வரைபடத்தால் சர்ச்சை கிளம்பியுள்ளது.
இந்தியா-சீனா எல்லை
இந்தியா-சீனா எல்லைட்விட்டர்

அருணாச்சலப் பிரதேசத்தைச் சொந்தம் கொண்டாடும் சீனா!

அண்டை நாடான சீனா, எல்லைப் பிரச்னையில் அடிக்கடி இந்தியாவிடம் எல்லை மீறி வருகிறது என்றே சொல்ல வேண்டும். இதற்கு அவ்வப்போது இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும், இந்தியா - சீனா எல்லைப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவிவரும் சூழலில், லடாக்கில் குறிப்பிட்ட பகுதியை சீனா ஆக்கிரமித்தது. மேலும், அருணாச்சலப் பிரதேசத்தில் இந்தியா - சீனா எல்லைப்பகுதியின் கிழக்குப் பகுதியிலுள்ள பல சதுர கி.மீ பகுதியைச் சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு இந்தியா தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் சீனா தொடர்ந்து அத்துமீறி வருகிறது.

புதிய வரைபடத்தை வெளியிட்ட சீனா!

இந்த நிலையில், சீனா புதிய வரைபடம் ஒன்றை அதிகாரப்பூர்வமாக நேற்று (ஆகஸ்ட் 28) வெளியிட்டது. இது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தவிர, ’உலகின் பல்வேறு நாடுகளின் தேசிய எல்லைகளை வரைவதன் அடிப்படையில் இந்த வரைபடம் உருவாக்கப்பட்டது’ என்று சீனா கூறியுள்ளது. இந்த வரைபடத்தின் மூலம், இந்த பகுதிகளில் சீனா தனது உரிமைகோரல்களை வலுப்படுத்த விரும்புவதாக தெரிகிறது.

இந்திய நிலப் பகுதிகளை உரிமைகோரும் சீனா!

அதில் வழக்கம்போல, ஆக்கிரமிப்பில் வைத்திருக்கும் இந்தியப் பகுதிகளை ’அக்‌ஷயா சின்’ எனக் குறிப்பிட்டிருக்கிறது. அத்துடன் அருணாச்சல பிரதேச மாநிலத்தை, ’தெற்கு திபெத்’ எனவும் குறிப்பிட்டுள்ளது. இந்திய நிலப் பகுதிகளை மட்டுமல்ல, பல்வேறு நாடுகளின் எல்லைப் பகுதிகளையும்கூட சீனா தம்முடைய பிரதேசம் என இந்த வரைபடத்தில் உரிமைகோரி இருக்கிறது. தைவானையும் தனது நிலப்பகுதியாக சுட்டிக்காட்டியுள்ளது. தென் சீனா கடலின் பெரும் பகுதியையும் இந்த வரைபடம் மூலமாக தனது நிலம் என்கிறது சீனா. சீனாவின் இந்த செயலுக்கு இந்தியா சார்பில் கண்டனம் வலுத்து வருகிறது. ’அருணாச்சலப் பிரதேசம் தனது ஒருங்கிணைந்த பகுதி என்றும், அதில் ஒருபோதும் மாற்றமில்லை’ என்றும் இந்தியா பலமுறை கூறிவருகிறது.

பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பேசிய தலைவர்கள்!

லடாக் எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கு மோதலைத் தொடர்ந்து இந்தியா- சீனா இடையே பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இருதரப்பும் இடையேயான பதற்றத்தைத் தணிக்கும் வகையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. சில நாட்களுக்கு முன்னர்கூட, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசினர். ’எல்லைப் பகுதியில் அமைதி, நிலைத்தன்மையை இருதரப்பும் உறுதி செய்ய வேண்டும்’ என அப்போது வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அருணாச்சல பிரதேசத்துக்கு உரிமை கொண்டாடி புதிய வரைபடத்தை மீண்டும் சீனா அடாவடியாக வெளியிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா வலுவான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

புதுடெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் (செப்டம்பர் 9 மற்றும் 10ஆ தேதி) கலந்துகொள்ள அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வருவதற்கு முன்னதாக இந்த வரைபடம் வெளியிடப்பட்டு இருப்பதுதான் தற்போது இந்திய அரசியலில் புயலைக் கிளப்பியிருக்கிறது. இந்தியாவிற்கு எதிரான செயல்பாடுகளில் மறைமுகமாக சீனா செயல்பட்டு வருவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், எல்லை விவகாரத்தில் சீனா தொடர்ந்து இந்தியாவிடம் வாலாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. எல்லையில் சாலை அமைப்பது, கட்டடம் கட்டுவது, பாலம்கட்ட முயற்சிப்பது போன்ற சீனாவின் செயல்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்தியா வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

Rahul Gandhi
Rahul Gandhi-

ராகுல் காந்தி கூறிய கருத்துடன் ஒப்பிட்டுப் பேசும் சிவசேனா!

குறிப்பாக, காங்கிரஸ் மூத்த தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி கூறிய கருத்தை, பிற அரசியல்வாதிகளும் கையில் எடுத்துள்ளனர். ”கார்கில் அருகே சீனப் படைகள் அத்துமீறி நுழைந்துள்ளன. இந்தியாவின் ஓர் அங்குலம் நிலத்தைக்கூட சீனா கைப்பற்றவில்லை என்று பிரதமர் மோடி சொன்னது பொய். இது கார்கில் பகுதி மக்களுக்கும் தெரியும்” என ராகுல் காந்தி கூறிய கருத்தை, தற்போது சீன வரைபடத்துடன் ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர்.

”சீனா மீது துல்லியத் தாக்குதல் நடத்த வேண்டும்!”

இதுகுறித்துப் பேசிய சிவசேனா (உத்தவ் தாக்கரே தரப்பு) எம்.பி. சஞ்சய் ராவத், 'லடாக்கில் உள்ள பாங்காங் பள்ளத்தாக்கில் சீனா நுழைந்ததாக ராகுல் காந்தி கூறியது உண்மைதான். மத்திய அரசுக்கு தைரியம் இருந்தால் சீனா மீது துல்லியத் தாக்குதல் (சர்ஜிக்கல் ஸ்டிரைக்) நடத்த வேண்டும். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்டு சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வாழ்த்தினார். அதன்பின், சீனா தன் நாட்டின் வரைபடத்தை வெளியிடுகிறது' என்று பேசியுள்ளார்.

சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத்ani

2023இல் 11 பெயர்களை மாற்றிய சீனா!

கடந்த ஏப்ரம் மாத தொடக்கதில் சீனா, திபெத்தின் தெற்கில் உள்ள அருணாச்சலப் பிரதேசத்தின் ஜங்னன் பகுதியை ’ஜிஜாங்’ என குறிப்பிட்டிருந்தது. அத்துடன், இந்த ஜங்னன் பகுதியைச் சேர்ந்த 11 இடங்களின் பெயர்களையும் சீன உள்துறை அமைச்சகம் மாற்றி இருந்தது. 5 மலைமுகடுகள், 2 புகழ்பெற்ற பகுதிகள், 2 நிலப்பகுதிகள், 2 ஆறுகள் ஆகிய 11 இடங்களின் பெயர்களை சீனா பெயர் மாற்றி இருந்தது. இந்த 11 பகுதிகளும் நமது நாட்டின் கட்டுப்பாட்டின்கீழ் இருப்பவை ஆகும்.

இந்தியாவின் அங்கம் அருணாச்சல் பிரதேசம்!

இருந்தும் அவற்றை தங்கள் நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளின் பெயர்களை மாற்றுவதுபோல் சீனா பெயர் மாற்றம் செய்தது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று 2017ஆம் ஆண்டு 6 இடங்களின் பெயர்களையும், 2021ஆம் ஆண்டு 15 இடங்களின் பெயர்களையும் சீனா மாற்றியிருந்தது. இப்படி சீனா பெயர் மாற்றுவதற்கு கண்டனம் தெரிவித்த இந்தியா, ’அருணாச்சலப் பிரதேசத்தின் சில பெயர்களை மாற்றுவதால் அதன் இந்த நிலை மாறிவிடாது. அருணாச்சலப் பிரதேசம் எப்போதும் இந்தியாவின் அங்கமாகவே இருக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டது.

வரைபடத்தில் இடம்பெற்ற ’9-கோடு’

இது தவிர சீனா வெளியிட்ட புதிய வரைபடத்தில் அந்நாட்டின் எல்லைக் கோரிக்கைக்கான ’9-கோடு’ (nine-dash line) மீண்டும் காட்டப்பட்டுள்ளது. 9-கோடு 1940களில் சீன புவியியலாளர் மூலம் ஒரு வரைபடத்தில் வரையப்பட்டது. இது U வடிவ கோடு ஆகும். இது தென் சீனக் கடலின் 90 சதவீதத்தை உரிமை கோருகிறது. ஆனால் அந்தப் பகுதியை பிலிப்பைன்ஸ் அரசு, ’வடக்கு பிலிப்பைன்ஸ் கடல்’ என்று அழைக்கிறது. இங்கு ஆழமற்ற கடற்பகுதிகளில் மணலைப் போடுவதன் மூலம் செயற்கையான தீவுகளையும் சீனா உருவாக்கியுள்ளது.

எதிர்க்கும் பிலிப்பைன்ஸ், வியட்நாம் நாடுகள்!

அவ்வாறு உருவாக்கப்பட்ட செயற்கை தீவுகள் ’மணல் பெருஞ்சுவர்’ என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தக் 9 கோட்டை, வியட்நாம், மலேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகள் கடுமையாக எதிர்க்கின்றன. இதுதொடர்பாக 2016இல் சர்வதேச நீதிமன்றத்தை பிலிப்பைன்ஸ் நாடியது. அப்போது சர்வதேச நீதிமன்றம், “9-கோடு சட்டப்பூர்வ அங்கீகாரம் ஏதுமில்லை. ஆகையால் பிலிப்பைன்ஸ் அப்பகுதிகள் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கலாம்” என்று கூறியது. ஆனால் அந்தத் தீர்ப்பை சீனா நிராகரித்தது. சீனாவுடன் இவ்விவகாரத்தில் பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற நாடுகள் அவ்வப்போது கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com