வாரத்தில் 30 நிமிடம் செல்போனில் பேசுறீங்களா? விஞ்ஞானிகள் விடுக்கும் இந்த எச்சரிக்கை உங்களுக்குதான்!

வாரத்தில் 30 நிமிடங்களுக்கு மேல் செல்போனில் பேசுபவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்பு 12 சதவீதம் அதிகம் என சீன விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
உயர் ரத்த அழுத்தம்
உயர் ரத்த அழுத்தம்twitter page

இன்று சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் செல்போன் என்னும் கருவி ஆட்கொண்டுள்ளது. அது, இல்லாவிட்டால் உலகமே இல்லை எனும் அளவுக்கு அவர்களும் அவற்றுடன் பின்னிப்பிணைந்துள்ளனர். தவிர, அவர்களுக்கு ஏற்ற வகையில் புதுப்புது அப்டேட்களையும் செல்போன் வரமாய்த் தந்து மகிழ்கின்றன. இந்த நிலையில், வாரத்தில் 30 நிமிடங்களுக்கு மேல் செல்போனில் பேசுபவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்பு 12 சதவீதம் அதிகம் என ஆராய்ச்சியில் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஆராய்ச்சியை, சீனாவின் குவாங்சோவில் உள்ள தெற்கு மருத்துவப் பல்கலைக்கழகம் நடத்தியுள்ளது. இந்த ஆய்வில், 37 முதல் 73 வயதுக்குட்பட்ட உயர் ரத்த அழுத்தம் இல்லாத 2,12,000 பேர் கலந்துகொண்டதாகவும், அவர்களைத் தொடர்ந்து 12 ஆண்டுகள் கண்காணித்ததாகவும், அதன்பேரிலேயே இந்த ஆய்வு வெளியிடப்பட்டிருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

12 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களைப் பரிசோதித்தபோது, 7 சதவீதம் பேருக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள், வாரத்தில் அரை மணி நேரம் பேசுபவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் 12 சதவீதமும், 30-59 நிமிடம் பேசுபவர்களுக்கு 13 சதவீதமும், 1-3 மணி நேரம் பேசுபவர்களுக்கு 16 சதவீதமும் உயர் ரத்த அழுத்த அபாயம் அதிகரிக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

உலகளவில் 10 வயதுக்கு மேற்பட்டவர்களில் முக்கால்வாசி பேர் செல்போன் வைத்துள்ளனர். இந்த கருவிகள் குறைந்த அளவிலான ரேடியோ அலைவரிசை ஆற்றலை வெளியிடுகின்றன. இவைகளை நீண்டநேரம் வெளிப்படுத்தினால், ரத்த அழுத்தம் அதிகரிக்கும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். மனிதர்களில் பெரும்பாலானவர்களுக்கு, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கு உயர் ரத்த அழுத்தமே முக்கிய காரணம் எனவும், இதனால் உலகம் முழுவதும் பலருக்கு அகால மரணம் ஏற்படுகிறது என மருத்துவ அறிக்கைகள் கூறும் நிலையில், வாரத்தில் 30 நிமிடங்களுக்கு மேல் செல்போனில் பேசுபவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்பு 12 சதவீதம் அதிகம் என சீன விஞ்ஞானிகள் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com