“நாட்டில் வறுமையை ஒழிப்பதில் சீனாவிற்கு முழு வெற்றி” - சீன அதிபர் ஜின்பிங்
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட சீன நாட்டில் வறுமை என்பது முழுவதுமாக ஒழிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் ஜின்பிங். கடந்த 40 ஆண்டு காலமாக வறுமையை ஒழிக்க மேற்கொண்ட முயற்சிகள் அனைத்திற்கும் கிடைத்த பலன் இது எனவும் அவர் தெரிவித்துள்ளார். சீனாவில் நடந்த பொது நிகழ்வில் அவர் பேசியபோது இதை தெரிவித்துள்ளார்.
சுமார் 770 மில்லியன் மக்கள் அரசின் முயற்சியால் வறுமையின் பிடியிலிருந்து விடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சீனாவில் வறுமையை முற்றிலும் ஒழிக்க ஐக்கிய நாடுகள் சபை 2030 வரை கெடு கொடுத்திருந்த நிலையில் அதற்கு முன்னதாகவே சீனா அதை எட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கடந்த எட்டு ஆண்டுகளில் மட்டும் 98.99 மில்லியன் மக்கள் வறுமையின் பிடியிலிருந்து வெளிவந்துள்ளதாகவும், இதில் ஊரக பகுதியை சேர்ந்த மக்களும் அடங்குவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் சீனா உலக நாடுகளுக்கு மத்தியில் மீண்டும் ஒரு அதிசயத்தை நிகழ்த்தி காட்டியுள்ளதாகவும், இது வரலாற்றில் நிச்சயம் இடம் பிடிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக சீன அரசு கடந்த 8 ஆண்டுகளில் 246 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.