போராட்டத்தின் எதிரொலியால் சீனாவில் பூஜ்ஜிய கொரோனா கொள்கையில் தளர்வு.. ஆனால்!

போராட்டத்தின் எதிரொலியால் சீனாவில் பூஜ்ஜிய கொரோனா கொள்கையில் தளர்வு.. ஆனால்!
போராட்டத்தின் எதிரொலியால் சீனாவில் பூஜ்ஜிய கொரோனா கொள்கையில் தளர்வு.. ஆனால்!

பூஜ்ஜிய கொரோனா கொள்கைக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் வெடித்ததையடுத்து, கொள்கையில் தளர்வுகளை ஏற்படுத்தியுள்ளது சீன அரசு.

சீனாவில், கொரோனா தொற்றால் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர் பொதுமுடக்கம், கொரோனா பரிசோதனைகள் மற்றும் தீவிர கண்காணிப்பு, சுதந்திரமின்மை போன்ற அரசாங்கத்தின் தொடர்ச்சியான தாக்குதல்களால் மக்கள் விரக்தியின் விளிம்பிற்கே தள்ளப்பட்டுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் செய்திகள் கூறுகின்றன. சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் பூஜ்ஜிய - கொரோனா கொள்கை (zero-Covid policy) கடுமையாக கடைபிடிக்கப்பட்டது. மற்ற நாடுகளைவிட சீனாவில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பொதுமுடக்கம் போன்றவை மிக தீவிரமாக கடைபிடிக்கப்பட்டாலும், அங்கு தொற்றின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருவது பொதுமக்களுக்கு அரசின் நடவடிக்கைகள் மீதான அதிருப்தியையும் எதிர்ப்பையும் கிளப்பியது.

இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங், எதிர்பாராத விதமாக மக்களின் எதிர்ப்பு அலைகளுக்கு ஆளாகியுள்ளார். சீனாவின் பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பூஜ்ஜிய - கொரோனா கொள்கைக்கு எதிராக போராட்டத்தில் இறங்கினர். பொதுவாக சீனாவில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவது கடினம் என்றாலும், கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக கட்டாய கட்டுப்பாடுகளுக்குள் முடக்கப்பட்டிருக்கும் பொதுமக்கள் பொதுவெளியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தின் விளைவாக தற்போது சீன அரசு தனது பூஜ்ஜிய - கொரோனா கொள்கையில் சற்று தளர்வை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் தலைநகரான பெய்ஜிங் உட்பட அனைத்து இடங்களிலும் வணிக தளங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன மற்றும் பரிசோதனைகள் தளர்த்தப்பட்டுள்ளன. மத்திய அரசின் ஆணைக்கு இணங்க கடந்த சில ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தொடர் தடைகளிலிருந்து உள்ளூர் அதிகாரிகள் தளர்வுகளை அமல்படுத்தியுள்ளனர். கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான புதிய அணுகுமுறைகளை அந்நாட்டு அரசு தற்போது நாடிவருகிறது.

சீன தலைநகரான பெய்ஜிங்கில் நிறைய வணிக தளங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் குறிப்பாக பொது போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகள் இனிமேல் 48 மணிநேரத்துக்குள் எடுக்கப்பட்ட வைரஸ் நெகட்டிவ் சான்றிதழை காண்பிக்கவேண்டிய அவசியம் இல்லை. இந்த ஆண்டு இரண்டு மாதங்கள் கடுமையான பொதுமுடக்கத்துக்கு உட்படுத்தப்பட்ட வர்த்தகமையமான ஷாங்காயில், குடியிருப்புவாசிகள் பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத்தலங்கள் போன்ற பொதுஇடங்களுக்கு கொரோனா சான்றிதழ் இல்லாமல் செல்லவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா எதிர்ப்பு போராட்டம் வெடித்த வடகிழக்கு நகரமான உரும்கியில், சூப்பர் மார்க்கெட்டுகள், ஹோட்டல்கள், ரெஸ்டாரண்டுகள் மற்றும் ஸ்கை ரிசார்ட்டுகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் சீனாவின் மேற்கு பிராந்தியமான ஜின்ஜியாங், நீண்ட, கடுமையான பொதுமுடக்கத்துக்கு ஆளானது. அங்கு சில பகுதிகள் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை மூடப்பட்டிருந்தன. 2019ஆம் ஆண்டு முதன்முதலில் கொரோனா கண்டறியப்பட்ட சீனாவின் உகாண் மாகாணம் மற்றும் ஷாண்டோங்கிலும் பொது போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கான கொரோனா பரிசோதனை விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.

உலகின் மிகப்பெரிய ஐபோன் தயாரிப்பு தொழிற்சாலை அமைந்துள்ள ஷெங்ஷோவு -இல் மக்கள் பொது இடங்களுக்கு செல்லவும், 48 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இல்லாமல் பொது போக்குவரத்தை பயன்படுத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா விதிமுறைகளை தளர்த்திய சீனாவின் இந்த முன்னெடுப்பை உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது.

சீனாவில் சில கோவிட் விதிகள் தளர்த்தப்பட்டாலும், பேரணிகளை அடக்குவதற்கு பாதுகாப்பு ரோந்து எந்திரங்கள் வேகமாக முடுக்கிவிடப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் தணிக்கை மற்றும் மக்கள்மீதான கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சீனாவின் முக்கிய நகரங்களில் விதிமுறைகள் தளர்த்தப்பட்டதால், கொரோனா பரிசோதனை மையங்கள் பல இடங்களில் மூடப்பட்டுள்ளன. இதனால் பிற தேவைகளுக்கு பல இடங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள, அடர் குளிரிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்துகிடக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக, மாணவர்கள் 24 மணிநேரத்துக்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இல்லாமல் பள்ளிகளுக்கு செல்லமுடியாது என்ற விதிமுறை இன்னமும் அமலில்தான் உள்ளது. விதிமுறைகள் முழுவதும் நீக்கப்படாமல் கொரோனா பரிசோதனை மையங்களை மூடி என்ன பயன்? என மக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். சீனாவில் இன்று 29,724 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com