சீனாவை தொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா.. ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்பு
சீனாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.
சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுகான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா ஆட்கொல்லி வைரஸ் தற்போது உலகமெங்கும் பரவியுள்ளது. சீனாவையே முடக்கிப் போட்டுள்ள கொரோனா வைரஸால், இதுவரை அந்நாட்டில் 1016 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டில் சார்ஸ் வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கையைவிட, கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாக, உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
இந்நிலையில், கோடை வெப்பம் சுட்டெரித்தால் கொரோனா வைரஸ் காணாமல் போய்விடும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். குளிர்காலங்களில் பரவும் இத்தகைய வைரஸ்கள், கோடை காலத்தின்போது அதிக வெப்பம் ஏற்படும்போது முற்றிலும் அழிந்துவிடும் என்றும், எனவே மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
அதே சமயம், இது எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்பதை மருத்துவ ரீதியாக கூற முடியாது என அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.