எகிறும் கொரோனா - 6 நாளில் 6000 படுக்கை வசதி கொண்ட புது மருத்துவமனையை கட்டும் சீனா
சீனாவில் கொரோனா தொற்று திடீரென அதிகரிக்கத் துவங்கியதை அடுத்து, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆறே நாட்களில் 6000 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையை அந்நாட்டு அரசு கட்டத்துவங்கியுள்ளது.
சீனாவின் கிழக்கு கடற்கரை மற்றும் உள்நாட்டில் உள்ள பிற மாகாணங்கள் மற்றும் நகரங்களில் நூற்றுக்கணக்கில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2020 முதல் சீன நகரங்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படும்போது மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து தொற்றுப்பரவலை கையாள்கிறது சீன அரசு.
தற்போது சீனாவின் பல மாகாணங்களில் தொற்று பரவியதை அடுத்து அங்கு ஊரடங்கு விதிகள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. தொற்று உறுதி செய்யப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சீனாவின் ஜிலின் நகரில் மின்னல் வேகத்தில் ஒரு தற்காலிக மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. 6,000 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை, ஆறு நாட்களுக்குள் பயன்பாட்டிற்கு தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடகிழக்கு சீனாவின் தொழில் நகரமான ஜிலின் நகரில் இந்த மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா கூறியுள்ளது. இந்த மாகாணபிராந்தியத்தில் ஏற்கனவே மார்ச் 12 ஆம் தேதி நிலவரப்படி மூன்று தற்காலிக மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன என்று செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இதற்கிடையில், சீனாவில் திங்கள்கிழமை 2,300 புதிய கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை, 3,400 புதிய கொரோனா தொற்று பதிவானது. இது இரண்டு ஆண்டுகளில் அதிகபட்ச தினசரி எண்ணிக்கையாகும். இதன் காரணமாகவே நாடு முழுவதும் தொற்றுப்பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை சீன அரசு முடுக்கிவிட்டுள்ளது.