"திருமணத்திற்குப் பெண் தேவை” - ஆன்லைனில் விளம்பரம் வெளியிட்ட சீன முதலீட்டாளர்!
சீனாவைச் சேர்ந்த 10 பில்லியன் யுவானுக்கு மேல் நிகர மதிப்புள்ள முதலீட்டாளரான ஒருவர், சமூக ஊடகத் தளங்களில் திருமண விளம்பரம் ஒன்றை வெளியிட்டிருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.
சீனாவைச் சேர்ந்தவர் லியு ஜின். 1990 பிறந்த இவர், ஜெர்மனில் உள்ள ஓர் உயர் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். தொழில்முறை முதலீட்டாளரான இவர் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள யான்டாயிலும், ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ஹாங்சோவிலும் சொத்துக்களை வைத்திருக்கிறார். தவிர, 10க்கும் மேற்பட்ட பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் 10 பெரிய தனிப்பட்ட பங்குதாரர்களில் ஒருவராக உள்ளார். மேலும் ஒன்றுக்கும் மேற்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வைத்திருக்கிறார். 10 பில்லியன் யுவானுக்கு மேல் (1.4 பில்லியன் டாலர்) நிகர மதிப்புள்ள சொத்துக்களை வைத்துள்ளார். புகழ்பெற்ற அமெரிக்க முதலீட்டாளர் வாரன் பஃபெட்டை மிஞ்ச வேண்டும் எனக் கூறியிருக்கும் லியு ஜின், திருமண விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தன்னை மிகவும் தேசபக்தி மற்றும் தேசியவாதி என்று சொல்லும் அவர், தனது எதிர்கால துணையும் இதேபோன்ற மதிப்புகளைப் பகிர்ந்து கொள்வார் எனத் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு நபரின் வாழ்க்கையில் மிக முக்கியமான முடிவு வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவருடைய இந்தப் பதிவுக்குப் பிறகு நாள்தோறும் நூற்றுக்கணக்கான கோரிக்கைகள் வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல பெண்கள் தங்கள் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இந்தப் பதிவு சந்தேகத்தை எழுப்பியுள்ளதாகவும், சில ஆன்லைன் பயனர்கள் மோசடி குறித்து எச்சரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இன்னும் சிலர் இதுதொடர்பாக எதிர்மறை கருத்துகளையும் பதிவிட்டுள்ளனர். முதலீட்டு வட்டாரங்களில் லியு அறியப்பட்டவர் என்றும், திருமண விளம்பரம் அவரது செல்வாக்கை அதிகரிக்கும் முயற்சியாக இது இருக்கலாம் என்றும் கூறினர்.

