சீனாவில் பிபிசி-க்கு தடை: முரண்படும் காரணங்கள்... பின்னணி என்ன?

சீனாவில் பிபிசி-க்கு தடை: முரண்படும் காரணங்கள்... பின்னணி என்ன?
சீனாவில் பிபிசி-க்கு தடை: முரண்படும் காரணங்கள்... பின்னணி என்ன?

பிரபல செய்தி நிறுவனமான பிபிசி வேர்ல்டு நியூஸ் தொலைக்காட்சிக்கு சீன அரசு தடை விதித்துள்ளது. சீன அதிபர் ஜின்பிங் மற்றும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக ஆட்சேபனைக்கு உரிய விதத்தில் செய்தி வெளியிட்டது, இந்தத் தடைக்கு காரணமாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், சீன தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்பு ஆணையமான வெளியிட்டுள்ள அறிக்கையில், ``பிபிசி தொலைக்காட்சியில் சீனா தொடர்பான செய்திகளை உகந்த முறையில் வெளியிடவில்லை. உண்மைக்குப் புறம்பான தகவல்கள் வெளியிட்டு, சீனாவின் தேசிய எண்ணங்களை காயப்படுத்தியதோடு, தேசிய ஒற்றுமையை குறைமதிப்பிற்கு தள்ளியுள்ளது. இதனால் சீனாவில் ஒளிபரப்பு தேவையை பிபிசி இழந்துவிட்டது" என்று எந்த சம்பவத்தையும் குறிப்பிடாமல் தடை குறித்து விவரித்துள்ளது.

செய்தி நிறுவனமான ஏ.எஃப்.பி, இந்தத் தடைக்கு வேறு விதமான காரணங்களை முன்வைக்கிறது. உய்குர் இஸ்லாம் சிறுபான்மையினர் மீதான சீன அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்ச்சைக்குரிய நிகழ்ச்சிகளை பிபிசி ஒளிபரப்பியது. சிங்கியாங்கில் "மறு கல்வி முகாம்கள்" என்று அழைக்கப்படும் முகாம்களில் உய்குர் பெண்கள் "பாலியல் பலாத்காரம், துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவது, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட உய்குர்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது" பற்றி அந்த நிகழ்ச்சி பேசியது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை சீனா மறுத்துள்ளது.

அதேபோல், வுஹானில் கொரோனா வைரஸின் தோற்றம் மற்றும் சீன அரசாங்கம் அதை எவ்வாறு மூடிமறைத்தது என்று மற்றொரு ஆவணப்படமும் ஒளிபரப்பப்பட்டது என்று ஏ.எஃப்.பி தெரிவித்துள்ளது.

இதையடுத்தே, ``செய்தி உண்மையாகவும் நியாயமானதாகவும் இருக்க வேண்டும். சீனாவின் தேசிய நலன்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது என்ற விதி மீறப்பட்டது. சீனாவில் தொடர்ந்து ஒளிபரப்ப பிபிசிக்கு அனுமதி இல்லை, மேலும் ஒரு வருடத்திற்கு ஒளிபரப்ப அதன் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படாது" என்று சீன அரசு அனுமதி மறுத்துள்ளது.

"சீன அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுக்க முடிவு செய்ததில் நாங்கள் ஏமாற்றமடைகிறோம். உலகின் மிகவும் நம்பகமான சர்வதேச செய்தி ஒளிபரப்பாளராகவும், உலகெங்கிலும் உள்ள கதைகள் பற்றிய நியாயமாகவும், பக்கச்சார்பற்றதாகவும், பயமோ ஆதரவோ இல்லாமல் பிபிசி செய்திகளை வெளியிட்டு வந்தது" என்று தடை தொடர்பாக பிபிசி அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த விவகாரம் சீனா மற்றம் சர்வதேச நாடுகள் மத்தியில் கடும் விவாதத்தையும் எதிர்ப்பையும் தூண்டியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com