திபெத்தில் ஓடும் பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப்பெரிய அணை கட்ட சீனா ஒப்புதல்.. இந்தியா கவலை!
திபெத்திய பீடபூமியின் கிழக்கு பகுதியில் மிகப்பெரிய நீர்மின் அணையை கட்டுவதற்கு சீனா ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அணைத் திட்டமானது இந்தியா மற்றும் பங்களாதேஷில் உள்ள லட்சக்கணக்கான மக்களைப் பாதிக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
திபெத்தில் உருவாகும் நதி யார்லுங் சாங்போ. இந்த நதி திபெத்தை விட்டு தெற்கே இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்களிலும் இறுதியாக வங்காளதேசத்திலும் பாயும் போது பிரம்மபுத்திரா நதியாக மாறுகிறது. இந்த யார்லுங் சாங்போ நதியைத் தடுத்து மிகப்பெரிய அணையை கட்ட சீனா முயற்சித்து வருகிறது.
முன்னதாக, 2020ம் ஆண்டில், சீனாவில் உள்ள பவர் கன்ஸ்ட்ரக்ஷன் கார்ப் என்ற நிறுவனம், தன்னாட்சி பெற்ற திபெத்தில் உற்பத்தியாகும் யார்லுங் சாங்போ ஆற்றில் அணை கட்டினால் ஆண்டுதோறும் 300 பில்லியன் கிலோவாட்-மணிநேர மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று கூறியிருந்தது.
அதன் அடிப்படையில் யார்லுங் சாங்போ ஆற்றில் அணைகட்ட சீனா ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அணையானது மத்திய சீனாவில் உள்ள உலகின் மிகப்பெரிய த்ரீ கோர்ஜஸ் அணையின் 88.2 பில்லியன் kWh வடிவமைக்கப்பட்ட கொள்ளளவை விட மூன்று மடங்கு அதிகமாகும்.
இத்திட்டத்தின் மூலம் சீனாவின் கார்பன் உச்சம் மற்றும் கார்பன் நடுநிலைமை இலக்குகளை அடைவதிலும், பொறியியல் போன்ற தொடர்புடைய தொழில்களை அதிகப்படுத்துவதிலும், திபெத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் இந்தத் திட்டம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று அதிகாரப்பூர்வ சின்ஹுவா செய்தி நிறுவனம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
அணை கட்டுவதற்காக 254.2 பில்லியன் யுவான் ($34.83 பில்லியன்) செலவாகும் என்று சொல்லப்படுகிறது.
இந்த அணை கட்டும் திட்டத்தை திபெத்தில் அமல்படுத்தினால் எத்தனை பேரை இடமாற்றம் செய்யும் என்பதையும், பீடபூமியில் உள்ள பணக்கார மற்றும் மிகவும் வேறுபட்ட உள்ளூர் சுற்றுச்சூழல் அமைப்பை அது எவ்வாறு பாதிக்கும் என்பதையும் அதிகாரிகள் குறிப்பிடவில்லை.
ஆனால், திபெத்தில் கட்டப்பட உள்ள அணையினால் சுற்றுச்சூழலோ அல்லது கீழ்நிலை நீர் விநியோகத்திலோ பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று சீன அதிகாரிகள் கூறியுள்ளனர். இருப்பினும், இந்தியா மற்றும் வங்காளதேசத்திற்கு இது பெரும் தலைவலியை உண்டு பண்ணும். இந்த அணைக்கட்டுவதால் ஆற்றின் ஓட்டம் மற்றும் அதன் போக்கும் மாறக்கூடும் என்று சொல்லப்படுகிறது.