சீனாவின் வலிமையான தலைவராக உருவெடுக்கும் ஸீ ஜின்பிங்!
சீனாவை அடுத்த 5 ஆண்டுகளுக்கு வழிநடத்த இருக்கும் கம்யூனிஸ தலைமை நிலைக்குழுவின் உறுப்பினர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் அதிபர் ஸீ ஜின்பிங்கு பிறகு யார் அதிபராகப் போகிறார் என்பது குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை.
பெய்ஜிங்கில் நடந்த கம்யூனிஸ தேசிய மாநாட்டில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு சீனாவை வழிநடத்த இருக்கும் கம்யூனிஸ தலைமை நிலைக்குழுவின் உறுப்பினர்களின் விவரம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் 7 பேர் கொண்ட நிலைக்குழுவில் அதிபர் ஸீ ஜின்பிங், பிரதமர் லீ கெகியாங் தவிர மற்ற ஐந்து பேரும் புதியவர்கள். கட்சியின் பொதுச் செயலாளரா ஸீ ஜின்பிங் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீடிப்பார். இரண்டாவது ஐந்தாண்டு கால ஆட்சி தொடங்கும்போது, கட்சியின் பொதுச் செயலாளராக அடுத்து பதவியேற்கப் போவது யார் என்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்படுவது வழக்கம். அந்த நடைமுறை இப்போது பின்பற்றப்படவில்லை. சீனாவைப் பொறுத்தவரை, கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்தான் நாட்டின் அதிபராகவும், ராணுவத்தின் தலைவராகவும் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.