உக்கிரமாகும் உக்ரைன் - ரஷ்யா போர்; பலியான குழந்தைகள் - கலங்க வைக்கும் தகவல்

உக்கிரமாகும் உக்ரைன் - ரஷ்யா போர்; பலியான குழந்தைகள் - கலங்க வைக்கும் தகவல்
உக்கிரமாகும் உக்ரைன் - ரஷ்யா போர்; பலியான குழந்தைகள் - கலங்க வைக்கும் தகவல்

பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் ஒப்புக்கொண்ட போதிலும் அந்நாட்டில் ரஷ்ய படைகள் நடத்தி வரும் ஆக்ரோஷமான தாக்குதலில், இதுவரை 14 குழந்தைகள் உள்பட சாமானிய மக்கள் 352 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டின் மீது படையெடுத்த ரஷ்யா, தொடர்ந்து ஐந்தாவது நாளாக முக்கிய நகரங்கள் மீது குண்டுமழை பொழிந்து வருகிறது. ஏவுகணைகள், பீரங்கி குண்டுகளால் நடத்தப்படும் தாக்குதல்கள், உக்ரைனில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. சபரோசியா நகரத்தில் விமான நிலையத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. செர்காசி என்ற இடத்திலும் குடியிருப்புகள் அருகே குண்டுகள் வீசப்பட்டுள்ளதாக உக்ரைன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சூழலில், ரஷ்யாவின் ஏவுகணை தொகுப்பு அமைப்பை அழித்து, உக்ரைன் படை அதிர்ச்சி கொடுத்துள்ளது. உக்ரைன் ராணுவத்தின் தலைமை தளபதி ஜலுஷ்னி இது தொடர்பாக தனது முகநூலில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், துருக்கியிடம் இருந்து வாங்கப்பட்ட பேராக்டர் ட்ரோன் மூலம் ரஷ்யாவின் வலிமையான ஏவுகணை தொகுப்பை அழித்திருப்பதாக தெரிவித்து, காணொளியும் வெளியிட்டுள்ளார். சைடோமிர் என்ற பகுதியில் ரஷ்யாவுக்கு இந்த பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரம் ரஷ்யாவின் தாக்குதலில் 14 குழந்தைகள் உள்பட சாமானிய மக்கள் 352 பேர் இதுவரை உயிரிழந்திருப்பதாக உக்ரைன் கவலை தெரிவித்துள்ளது. மேலும், 116 குழந்தைகள் உள்பட ஆயிரத்து 684 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்திருக்கும் ரஷ்யா, ராணுவ நிலைகளையும், ராணுவ வீரர்களை மட்டுமே இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com