``உக்ரைனில் சிக்கியோரை மீட்கும் தமிழக குழுவுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்”- முதல்வர்
போர்களத்தில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்க அரசு சார்பில் நால்வர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு சென்று ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இக்குழுவுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் தீவிரமடைந்துவரும் நிலையில், அங்கு சிக்கியுள்ள தமிழக மாணவர்களையும், புலம்பெயர்ந்த தமிழர்களையும் மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அதுதொடர்பாக சிறப்பு ஒருங்கிணைப்புக்குழு அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட முதலமைச்சர் ஸ்டாலின், ரஷ்ய எல்லை வழியாக தமிழக மாணவர்களை அழைத்துவர வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளார். உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா, போலந்து, சுலோவாகியாவில் அடைக்கலம் புகுந்துள்ள மாணவர்களைக் கண்டறிந்து விமானம் மூலம் தமிழகம் அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியுள்ளார்.
இந்திய தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, எம்.எம்.அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் கூறியுள்ளார். இவர்கள் ஹங்கேரி, ருமேனியா, போலந்து, சுலோவாகியா நாடுகளுக்குச் சென்று சிறப்பு குழு அதிகாரிகளுடன் இணைந்து மீட்புப் பணிகளை செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உக்ரைனில் சிக்கியோரை மீட்கும் தமிழக குழுவுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்தி: பிரபல கடையை 'டேக் ஓவர்' செய்த ரிலையன்ஸ்: காரணம் என்ன?