சுக்குநூறாக சிதறிய விமானம்.. உள்ளிருந்த உயிர்களின் கதி.. சொல்ல முடியாத சோகம்!
செய்தியாளர் : ஐடா அருட்செல்வி
அமெரிக்காவின் மேற்கு அலாஸ்கா பகுதியில் உள்ள தொலைதூர ரேடார் தளத்தில் சார்டர் விமானம் அதாவது வாடகைக்கு ஒப்பந்தம் செய்து இயக்கப்படும் விமானம் ஒன்று, விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 8 பேரும் உயிரிழந்தனர். இந்தத் தகவலை அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
சுமார் 725 கி.மீ. தொலைவில், ஆங்கரேஜ் நகருக்கு மேற்கே அமைந்துள்ள கேப் நியூன்ஹாம் நீண்டதூர ரேடார் தள விமான நிலையத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. விமானம் ஆங்கரேஜில் இருந்து புறப்பட்டு, கேப் நியூன்ஹாம் தளத்தை நெருங்கியபோது விபத்துக்குள்ளானதாக NTSB அதாவது தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் அலாஸ்கா பிராந்தியத் தலைவர் கிளின்ட் ஜான்சன் தெரிவித்தார்.
விமானத்தில் இரண்டு விமானிகள் மற்றும் ஆறு பயணிகள் இருந்ததாகவும் அவர் கூறினார். விபத்தில் உயிரிழந்தவர்கள் ராணுவத்தில் மேற்கொண்டிருந்த குறிப்பிட்ட பணிகள் குறித்து ராணுவம் எந்த விவரத்தையும் வெளியிடவில்லை. எனினும், அந்த விமானம் சிவில் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்ட விமானம் என்று அலாஸ்கன் கமாண்ட் குறிப்பிட்டுள்ளது.
கேப் நியூன்ஹாம் ரேடார் தளம், அலாஸ்காவின் வான்வெளி மற்றும் அதன் எல்லைப் பகுதிகளில் பறக்கும் விமானங்களை கண்காணிக்கும் தொலைதூர ரேடார் தளங்களின் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். இதை பசிபிக் விமானப்படையின் பிராந்திய ஆதரவு மையம் நிர்வகித்து வருகிறது.
'இது எங்கள் ராணுவக் குடும்பத்துக்கும், நாங்கள் சேவையாற்றும் சமூகங்களுக்கும் பேரிழப்பு' என்று அலாஸ்கன் கமாண்ட் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ராபர்ட் டேவிஸ் தெரிவித்தார். உயிரிழந்தோரின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு முழுமையான ஆதரவு வழங்குவதே தற்போதைய முதன்மை நோக்கம் என்றும் அவர் கூறினார்.

