Rewind 2023: எர்டோகன் to ஜேவியர் மிலே.. உலக அரங்கில் அரசியல் மாற்றம் ஏற்பட்ட 6 நாடுகள்!

2023ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில தினங்களே உள்ளன. இந்த ஆண்டில் எத்தனையோ சுவாரஸ்யங்களும், துயரசம்பவங்களும் நடைபெற்று உள்ளன. அதில், ஒன்று உலகில் சில அரசியல் மாற்றங்களும் நடைபெற்றன. அப்படியான அரசியல் மாற்றம் ஏற்பட்ட சில நாடுகள் பற்றி இங்கு பார்ப்போம்.
உலகத் தலைவர்கள்
உலகத் தலைவர்கள்ட்விட்டர்

துருக்கி:

துருக்கி நாட்டின் அதிபராக மீண்டும் எர்டோகன் பதவியேற்றார். கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி துருக்கி - சிரிய எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர பூகம்பங்களால் 50,000க்கும் அதிகமானோர் பலியாகினர். இந்த பூகம்பத்தின்போது மீட்புப் பணிகளை சரிவர முடுக்கிவிடவில்லை என்று அதிபர் எர்டோகன் மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். பொருளாதார ரீதியாகவும் எர்டோகன் மீது மக்களிடையே எதிர்ப்பு அலை இருந்தது.

தாயீப் எர்டோகன்
தாயீப் எர்டோகன்

இதையடுத்துதான், துருக்கி அதிபர் தாயீப் எர்டோகனுக்கு எதிராக ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றுதிரண்டு ’துருக்கியின் காந்தி’ என்று அழைக்கப்படும் குடியரசு மக்கள் கட்சியைச் சேர்ந்த கெமல் கிளிக்டரோக்லுவை எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக தேர்ந்தெடுத்தனர். இதன் அதிபர் தேர்தலில் எர்டோகன் 52% வாக்குகளும் அவரை எதிர்த்திப் போட்டியிட்ட கெமால் 48 சதவீத வாக்குகளும் பெற்றனர். இதையடுத்து, எர்டோகனே மீண்டும் துருக்கி நாட்டு அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார்.

தாய்லாந்து:

தாய்லாந்தின் புதிய பிரதமராக பியூ தாய் கட்சியின் ஸ்ரேத்தா தவிசின் தேர்வுசெய்யப்பட்டார். கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் ஸ்‌ரேத்தாவின் பியூ கட்சி இரண்டாவது இடத்தைப் பிடித்தபோதும், நாடாளுமன்ற வாக்கெடுப்பில் ஸ்‌ரேத்தா பெரும்பான்மை வாக்குகளை உறுதிசெய்து நாட்டின் 30வது பிரதமர் ஆனார்.

ஸ்ரேத்தா தவிசின்
ஸ்ரேத்தா தவிசின்

நைஜர்:

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜர் நாட்டில், அதிபராக இருந்தவர் முகம்மது பசோம். கடந்த ஜூலை மாதம் புரட்சியில் ஈடுபட்ட அந்நாட்டு ராணுவம் அதிபராக இருந்த முகமது பசோம் தலைமையிலான அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. ராணுவப் புரட்சியைத் தொடர்ந்து, ராணுவ ஜெனரல் அப்துர் ரஹுமான் சியானி, தன்னை நைஜரின் தலைவராக அறிவித்துக்கொண்டார். முன்னாள் அதிபரும் அவர் குடும்பத்தினரும் சிறை வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

காபோன்:

மத்திய ஆப்பிரிக்க நாடானா காபோனில் (GABON), கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி, ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆட்சியை கவிழ்த்த ராணுவக் குழுவின் தலைவரான ஜெனரல் பிரைஸ் நிகுமா, நாட்டின் இடைக்கால அதிபராக பதவியேற்றார். கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் தற்போதைய அதிபர் அலி போங்கோ(ALI BONGO) வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த தேர்தல் முடிவுகளை ரத்து செய்வதாகவும் ராணுவம் அறிவித்தது. ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து, அதிபராக இருந்த அலி போங்கோ வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இதன்மூலம் 55 ஆண்டுகால குடும்ப ஆட்சி முடிவுக்கு வந்தது.

தர்மன் சண்முகரத்தினம்
தர்மன் சண்முகரத்தினம்

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் உட்பட மூன்று பேர் போட்டியிட்டனர். 1988ஆம் ஆண்டு சிங்கப்பூர் வர்த்தக தொழில்துறை அமைச்சகத்தின் மூத்த பொருளாதார நிபுணரான நியமனம் செய்யப்பட்ட தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூர் எம்.பியாக கடந்த 2001 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். கல்வி, நிதி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அமைச்சராகவும் பதவி வகித்துள்ள இவர், சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் சிங்கப்பூரின் 9ஆவது அதிபராக தர்மன் சண்முகரத்தினம் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுக் கொண்டார்.

அர்ஜென்டினா:

அர்ஜென்டினாவில் அதிபர் ஆல்பெர்டோ பெர்னாண்டஸின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், அங்கு கடந்த நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், தற்போதைய ஆட்சியில் பொருளாதாரத் துறை அமைச்சராக உள்ள செர்ஜியோ மாசா, ரினீயூவல் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து சுதந்திர கட்சியின் சார்பில் ஜேவியர் மிலே களம் இறங்கினார். தீவிர வலதுசாரி ஆதரவாளரான ஜேவியர் அரசு துறைகளின் எண்ணிக்கையைக் குறைத்து பணவீக்கத்தை கட்டுப் படுத்துவதாகவும் உறுதியளித்தார்.

ஜேவியர் மிலே
ஜேவியர் மிலே

இந்த நிலையில், பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஜேவியர் மிலே 55.8 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஜேவியரின் வெற்றி, அர்ஜென்டினா 1983ஆம் ஆண்டு ஜனநாயக நாடாக மாறிய பிறகு, நடத்தப்பட்ட அனைத்து கருத்துக்கணிப்புகளையும் மீறிய மாபெரும் வெற்றியாக கருதப்படுகிறது. அர்ஜென்டினா நாட்டின் அதிபராக வெற்றிபெற்ற, பொருளாதார நிபுணரான ஜேவியர் மிலே, கடந்த டிசம்பர் 11ஆம் தேதி பதவியேற்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com