\
Celine Dion's Emotional Return To Stage In Paris
Celine DionReuters

மாஸ் காட்டிய ’டைட்டானிக்’ பாடகி.. மீண்டுவந்த செலின் டியோன்.. கண்ணீரில் மூழ்கிய 30,000 ரசிகர்கள்!

’டைட்டானிக்’ படத்தில் இடம்பெற்ற உலகப் புகழ்பெற்ற பாடலைப் பாடி ரசிகர்களைக் கவர்ந்த பாடகி, அரிய நரம்புக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார்.
Published on

செய்தியாளர் - கார்த்திகேயன்

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் டிகாப்ரியோ, கேத் வின்ஸ்லெட் ஆகியோர் நடிப்பில், கடந்த 1997-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’டைட்டானிக்’. உலக அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த திரைப்படம், இன்றுவரை பலரது ஃபேவரைட்டான காதல் கதைகளில் ஒன்றாக உள்ளது. இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற, Every Night In My Dream.. I see you I feel you.. என்ற பாடல் இன்றளவும் பலரது Playlist-களை ஆண்டு வருகிறது என்றே கூறலாம். இந்த உலகப் புகழ் பெற்ற பாடலைப் பாடியவர்தான் செலின் டியோன்.

Celine Dion
Celine DionReuters

கனடிய பாடகரான இவருக்கு, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். 2022-ஆம் ஆண்டு அன்று, ஸ்டிஃப் பர்சன் சிண்ட்ரோம் என்ற அரிதான நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட செலின் டியோனால், நீண்டநேரம் மேடை நிகழ்ச்சிகளில் பாட முடியாது. அதிக இசைப் பாடல்களை விற்ற கலைஞர்களில் ஒருவரான டியோன், நியூ ஜெர்சியில் 2020இல் நடைபெற்ற கச்சேரிக்குப் பிறகு முழுமையான நிகழ்ச்சியை நடத்தாமலேயே இருந்தார். 2024-இல் நடந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில் மட்டும், ஒரே ஒரு பாடலைப் பாடியிருந்தார். இதனால், அவரது இசை விருந்தை நேரடியாக ரசிக்க முடியாமல், ரசிகர்கள் பெரும் சோகத்தில் மூழ்கியிருந்தனர்.

இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள லா டிஃபென்ஸ் அரினா என்ற அரங்கில், இசைக் கச்சேரி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தக் கச்சேரியில் முதன்மைப் பாடகியாக இடம்பெற்ற செலின் டியோன், 6 ஆண்டுகளுக்குப் பிறகு, பாடல்களைப் பாடி, ரசிகர்களை உற்சாகம் ஆக்கியுள்ளார். முன்னதாக, கச்சேரி மேடையில் பேசிய அவர், ’மீண்டும் மேடைக்குத் திரும்புவேன் என்று உறுதி அளித்திருந்தேன். இதோ உங்களுக்காக மீண்டும் வந்துவிட்டேன்’ என்று, ரசிகர்கள் முன்பு உணர்ச்சிப்பூர்வமாக கூறியிருந்தார்.

Celine Dion
Celine DionReuters

சுமார் 30 ஆயிரம் பேர் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியின் மேடையில் பேசியபோது, ’நீங்கள் என்னை நேசித்ததால்தான் இன்று நான் இந்த நிலையில் இருக்கிறேன். அழக்கூடாது என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். ஆனால் உங்களையெல்லாம் பார்ப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வளவு நாட்கள் உங்களை இழந்ததாக உணர்ந்தேன்’ என்று கூறி, ரசிகர்களையும் உணர்ச்சிவசப்பட வைத்திருக்கிறார். செப்டம்பர் மாதம் முதல் புத்தாண்டு வரையிலும் பாரிஸில் தனது நிகழ்ச்சிகளை நடத்த இருக்கும் பாடகி செலின் டியோனுக்கு, ரசிகர்கள் அளித்த வரவேற்பைக் கண்டு அவர் கண்ணீர்விட்டு நெகிழ்ச்சி அடைந்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com