கேட்டலோனியா தனி நாடு அறிவிப்புக்கு திடீர் முட்டுக்கட்டை

கேட்டலோனியா தனி நாடு அறிவிப்புக்கு திடீர் முட்டுக்கட்டை
கேட்டலோனியா தனி நாடு அறிவிப்புக்கு திடீர் முட்டுக்கட்டை

ஸ்பெயின் நாட்டிலிருந்து கேட்டலோனியா தனி நாடாக பிரிவது தொடர்பான அறிவிப்பு இப்போதைக்கு இல்லை என அந்நாட்டு அதிபர் கார்லஸ் ப்யூடிமோன்ட் அறிவித்துள்ளார்.

ஸ்பெயின் நாட்டின் வடகிழக்கில் கேட்டலோனியா மாகாணம் அமைந்துள்ளது. இது தன்னாட்சி பெற்ற மாகாணம் ஆகும். இதன் தலைநகர் பார்சிலோனியா. கேட்டலோனியாவின் மக்கள் தொகை 75 லட்சம். ஸ்பெயின் நாட்டின் பொருளாதாரத்தில் 20 சதவீதம் கேட்டலோனியாவின் பங்களிப்பு உள்ளது. கடந்த 2008 பொருளாதார தேக்கநிலையின்போது கேட்டலோனியா கடுமையாக பாதிக்கப்பட்டது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தது. ஆனால் ஸ்பெயின் அரசு கேட்டலோனியாவின் வளர்ச்சியில் அக்கறை காட்டவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது.

கேட்டலோனியா மாகாண மக்கள் கேட்டலான் என்ற மொழியை பேசுகின்றனர். அந்த மொழியை புறக்கணித்து ஸ்பானிஷ் மொழியை மட்டுமே பேச வேண்டும் என்று ஸ்பெயின் அரசு நிர்பந்தம் செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக கேட்டலோனியாவில் தனிநாடு கோரி கிளர்ச்சி ஏற்பட்டது. இதனையடுத்து, இம்மாதம் தொடக்கத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஒட்டுமொத்தமாக 20 லட்சத்து 26 ஆயிரம் பேர் வாக்களித்தனர். இதில் 90 சதவீத பேர் தனி நாடு கோரிக்கைக்கு ஆதரவு அளித்துள்ளனர். இருப்பினும், இந்த பொதுவாக்கெடுப்பு சட்டவிரோதமானது என்று ஸ்பெயின் பிரதமர் தெரிவித்து இருந்தார்.

இதனையடுத்து, கேட்டலோனியா தனி நாடு அறிவிப்பு வெளியாகும் என்று கடந்த சில நாட்களாக எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில், கேட்டலோனியா தனி நாடாக பிரிவது தொடர்பான அறிவிப்பு இப்போதைக்கு இல்லை என அதிபர் கார்லஸ் ப்யூடிமோன்ட் கூறியுள்ளார். மேலும், தனி நாடு தொடர்பாக, ஸ்பெயின் அரசுன் பேச்சுவார்த்தை நடத்தப்படுமென்றும் அறிவித்தார். இதுதொடர்பாக கேட்டலோனியா நாடாளுமன்றத்தில் பேசிய அவர், அண்மையில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பின் மூலம் தனி நாடாக கேட்டலோனியாவை அறிவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டும், தன்னிச்சையாக அதை அறிவிக்கவில்லை எனக் கூறினார். ஸ்பெயின் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏதுவாக, தனி நாடு அறிவிப்பை சில வாரங்களுக்கு ரத்து செய்வதாகவும் அறிவித்தார். இந்தப் பொதுவாக்கெடுப்பு அரசியல் சட்டத்துக்கு எதிரானது என ஸ்பெயின் நாட்டு நாடாளுமன்றம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com