\
UAE Viral Video: Why Does This Cargo Ship Appear to Float Above the Sea?
Cargo Ship Appears to Float Above the Sea in UAE’s Ajman: The Science Behind the Viral VideoInstagram

கடலுக்கு மேலே அந்தரத்தில் தொங்கும் கப்பல்? வைரலாகும் வீடியோ! வியக்க வைக்கும் அறிவியல்!

கடலுக்கு மேலே சரக்குக் கப்பல் ஒன்று அந்தரத்தில் மிதப்பது போன்ற வியப்பூட்டும் காட்சி இணையத்தில் தற்போது வைரலாகி, பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) அஜ்மான் (Ajman) கடற்கரையில் இந்தக் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.
Published on: 

செய்தியாளர்: துர்கா தேவி சரவணன்

வைரலாகி வரும் வீடியோவில், பெரிய சரக்குக் கப்பல் ஒன்று கடல் நீரிலிருந்து சில அடி உயரத்தில் மிதப்பது போன்று காட்சியளிக்கிறது. குறிப்பாக, கப்பலின் அடிப்பகுதிக்கும் கடல் நீருக்கும் இடையே தெளிவான இடைவெளி காணப்படுகிறது. கேமராவை நெருக்கமாகக் கொண்டு செல்லும்போது இந்த இடைவெளி மேலும் தெளிவாகத் தெரிகிறது. இதைப் பார்த்த பலரும், கப்பல் உண்மையிலேயே அந்தரத்தில் மிதக்கிறதா அல்லது இது ஏதேனும் தொழில்நுட்பத் தந்திரமா எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால், இது எந்தவொரு செயற்கைத் தந்திரமும் அல்ல; இயற்கையாக நிகழும் 'சுப்பீரியர் மிராஜ்' (Superior Mirage) எனப்படும் ஒளியியல் மாயையாகும். ஒளியியல் மாயை. பொதுவாக, கடல் மேற்பரப்பில் குளிர்ந்த காற்றும், அதன் மேலே சூடான காற்றும் இருக்கும்போது இது நிகழும். காற்றின் வெப்பநிலை அடுக்குக்கு அடுக்கு மாறுவதால், ஒளிக்கதிர்கள் நேராகச் செல்லாமல் வளைந்து பயணிக்கும். 

வளைந்து வரும் கதிர்கள் நம் கண்ணை அடையும்போது, பொருள் உண்மையான இடத்தை விட உயரத்தில் இருப்பது போலத் தெரியும். 

இதனால், தொலைவில் இருக்கும் பொருட்களின் உண்மையான இருப்பிடம் மாறுபட்டுத் தெரிகிறது. இதன் காரணமாக, கடலில் பயணிக்கும் கப்பல்கள் கடல் மட்டத்திற்கு மேலே அந்தரத்தில் மிதப்பது போன்ற தோற்றம் உருவாகிறது.

இத்தகைய ஒளியியல் மாயையால் கப்பல்கள் மட்டுமின்றி, தொலைவில் உள்ள கடற்கரைகள் மற்றும் பிற பொருட்களும் வழக்கத்திற்கு மாறாகத் தோன்றும் எனக் கூறப்படுகிறது.

இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் பலரும் வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். சிலர் இது இயற்கையின் அதிசயம் எனப் பாராட்டினாலும், வேறு சிலர் கப்பல் உண்மையில் கடல் நீரில்தான் இருப்பதாகக் கூறி விவாதித்து வருகின்றனர்.