"திருடர்களுடன் என்னால் அமர முடியாது" - எம்.பி. பதவியை ராஜினாமா செய்த இம்ரான் கான்

"திருடர்களுடன் என்னால் அமர முடியாது" - எம்.பி. பதவியை ராஜினாமா செய்த இம்ரான் கான்
"திருடர்களுடன் என்னால் அமர முடியாது" - எம்.பி. பதவியை ராஜினாமா செய்த இம்ரான் கான்

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷரீப் பதவியேற்றுள்ள நிலையில், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ராஜினாமா செய்துள்ளார். திருடர்களுடன் ஒன்றாக தன்னால் அமர முடியாது என தனது ராஜினாமாவுக்கு அவர் விளக்கமும் அளித்துள்ளார்.

பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடிக்கு பிரதமர் இம்ரான் கானே காரணம் என குற்றம்சாட்டிய எதிர்க்கட்சிகள், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. இதன் மீதான வாக்கெடுப்பில், பெரும்பாலான உறுப்பினர்கள் இம்ரான் கான் அரசுக்கு எதிராக வாக்களித்ததால் அவரது ஆட்சி கவிழ்ந்தது. இதன் தொடர்ச்சியாக, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷெபாஸ் ஷரீப், பாகிஸ்தான் பிரதமராக ஒருமனதாக இன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், புதிய பிரதமராக ஷெபாஸ் ஷரீஃபை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் முன்னாள் பிரதமர் இம்ரான் கானும், அவரது பாகிஸ்தான் தெஹ்ரிக் இன்சாத் (பிடிஐ) கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர், சிறிது நேரத்தில் இம்ரான் கான் உட்பட அவரது கட்சியினர் தங்கள் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இம்ரான் கான் கூறுகையில், "கோடிக்கணக்கில் ஊழல்களை செய்துள்ள ஒருவர் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்க போகிறார். இதை விட ஒரு நாட்டுக்கு மிகப்பெரிய அவமானம் எதுவும் இருக்க முடியாது. திருடர்களுடன் ஒன்றாக அமர எனக்கு விருப்பமில்லை. அதனால் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன்" என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com