H1B விசா கட்டணம்.. சீனா, ஜெர்மனியைத் தொடர்ந்து வெளிநாட்டு ஊழியர்களை ஈர்க்கும் கனடா!
”வெளிநாட்டுப் பணியாளர்களை ஈர்க்கும் வகையில் சலுகைகள் வழங்கப்படும்” என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தங்கி வேலை செய்வதற்காக, குறிப்பிட்ட துறையில், திறம்பெற்ற நிபுணர்களுக்கு மட்டுமே தற்காலிகமாக அனுமதிக்கப்படும் H1B விசா விண்ணப்பக் கட்டணத்தைப் பன்மடங்கு உயர்த்தி (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.88 லட்சம்) அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். செப்டம்பர் 21ஆம் தேதி முதல் இது அமலுக்கு வந்த நிலையில், வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் திட்டத்தை நம்பியுள்ள அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும், இந்தியர்கள் அமெரிக்கா செல்வதிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், இதற்கான மாற்று வழியை அவர்கள் தேடி வருகின்றனர். இதற்கிடையே அமெரிக்கா வெளிநாட்டு ஊழியர்களைக் கட்டுப்படுத்த விசா விதிகளைக் கடுமையாக்கி வரும் நிலையில், சீனா புதிய விசா நடைமுறையை அறிவித்துள்ளது. அறிவியல், தொழில்நுட்பம், பொறியல், கணிதம் சார்ந்த துறைகளில் உலக அளவில் உள்ள சிறந்த ஊழியர்களை ஈர்க்கும் நோக்கில் ‘K’ விசாவை அறிமுகம் செய்துள்ளது. இது, அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்காவின் புதிய விசா கட்டுப்பாடுகளால், மற்ற நாடுகள் இந்திய திறமையாளர்களை அணுகி வருகின்றன. இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், குறிப்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்த உலகளாவிய திறமையாளர்களுக்கான விசா கட்டணங்களை நீக்குவதற்கான வழிகளை ஆராய்ந்து வருகிறார். ஜெர்மனியும் திறமையான இந்திய தொழிலாளர்களை ஈர்க்க விரும்புகிறது. இந்தியாவிற்கான ஜெர்மன் தூதர் டாக்டர் பிலிப் அக்கர்மன் சமீபத்தில் திறமையான இந்தியர்களை ஜெர்மனியில் பணிபுரிய அழைத்தார், பல இந்திய தொழிலாளர்கள் தங்கள் ஜெர்மன் சகாக்களைவிட அதிக ஊதியம் பெறுகிறார்கள் மற்றும் சமூகத்திற்குப் பெரிதும் பங்களிக்கிறார்கள் என்று கூறினார்.
இந்த நிலையில், ”வெளிநாட்டுப் பணியாளர்களை ஈர்க்கும் வகையில் சலுகைகள் வழங்கப்படும்” என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். ”அமெரிக்காவில் அதிகமான எச்-1பி விசா வைத்திருப்பவர்களுக்கு இனி விசா நீட்டிப்பு கிடைக்காது. இவர்கள் திறமையானவர்கள். அவர்களுக்கு கனடாவில் ஒரு வாய்ப்பு வழங்கி பயன்படுத்திக் கொள்வோம். விரைவில் இதுகுறித்து ஒரு விசா சலுகையை வழங்குவோம். அந்தப் பணியாளர்களில் பலர் தொழில்நுட்பத் துறையில் உள்ளனர். மேலும் அவர்கள் கனடாவில் வேலைக்கு வரத் தயாராக உள்ளனர். கனடா அரசாங்கம் இந்த வகையான திறமைகளை உள்வாங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதுகுறித்து தெளிவான சலுகை விரைவில் இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
கனடா விசா சலுகையில் இறங்கினால், அது இந்திய நிபுணர்களுக்கு ஒரு தெளிவான மாற்று இடமாக கனடா இருக்கும் எனக் கூறப்படுகிறது. கனடாவில் இந்தியர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இதில் குடிபெயர்ந்தவர்களும் அதிகம். ஏப்ரல் 2022 மற்றும் மார்ச் 2023க்கு இடையில், கனடாவிற்கு குடிபெயர்ந்த 32,000 தொழில்நுட்ப ஊழியர்களில் சுமார் 15,000 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். 2024ஆம் ஆண்டில், சுமார் 87,000 இந்தியர்கள் கனேடிய குடிமக்களாக மாறியுள்ளனர். இது அவர்களை புதிய குடிமக்களின் மிகப்பெரிய குழுவாக மாற்றியுள்ளது. 2022ஆம் ஆண்டில், சுமார் 1,18,095 இந்தியர்கள் நிரந்தர குடியிருப்பாளர்களாக மாறியுள்ளனர், இது கனடாவில் உள்ள அனைத்து புதிய நிரந்தர குடியிருப்பாளர்களில் சுமார் 27-30% ஆகும்.