நியூயார்க்கில் ஜன.1 இஸ்ரேல் பிரதமர் கைது? மீண்டும் உறுதியாக சொன்ன ஜோஹ்ரான் மம்தானி.. பின்னணி என்ன?
நியூயார்க் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோஹ்ரான் மம்தானி, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயார்க் நகரத்திற்கு வந்தால் அவரைக் கைது செய்ய உத்தரவிடுவேன் என தனது பிரசார வாக்குறுதியை அளித்ததன் மூலம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளார்.
நியூயார்க் நகரத்தின் 'முதல் முஸ்லிம் மேயர்'
அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றார். இதில் வெற்றிபெற்றதன் மூலம், 34 வயதான அவர், முதல் இஸ்லாமிய மேயர், முதல் ஆசியர், முதல் இந்திய வம்சாவளி மேயர் உள்ளிட்ட பெருமைகளைப் பெற்றுள்ளார். குறிப்பாக, நியூயார்க் நகரத்தின் 'முதல் முஸ்லிம் மேயர்' என்று அவரது வெற்றி அரபு ஊடகங்களில் குறிப்பிடப்படுகிறது. தவிர, மம்தானின் வெற்றி, ஜனநாயகக் கட்சியின் முற்போக்கு அணியின் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. முன்னதாக, நியூயார்க் மேயர் தேர்தலில் இடதுசாரி கொள்கைகளை கொண்ட மம்தானி வெற்றி பெற்றால், நியூயார்க்கிற்கு அரசு நிதி வழங்காது என அதிபர் ட்ரம்ப் என மிரட்டியிருந்தார். அந்த மிரட்டலே, மம்தானிக்கு வெற்றியைப் பரிசாகத் தந்திருக்கிறது.
அதிபர் ட்ரம்ப் - ஜோஹ்ரான் மம்தானி மோதல்
இதன்மூலம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்திருக்கும் ஜோஹ்ரான் மம்தானி, நியூயார்க் வரலாற்றுப் பக்கங்களில் தனது மதிப்புமிக்க வார்த்தைகளாலும் உறுதிமொழிகளாலும் மீண்டும் மீண்டும் இடம்பிடித்து வருகிறார். இதற்கிடையே அதிபர் ட்ரம்பைச் சாடிய ஜோஹ்ரானுக்கு, அவரே தக்க பதிலடி கொடுத்திருந்தார். இதுதொடர்பாக ட்ரம்ப், “என்னிடம் ஜோஹ்ரான் மிகவும் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர், அமெரிக்க அரசுடன் அன்பாக நடந்துகொள்ள வேண்டும். மம்தானி ஒத்துழைக்கவில்லை என்றால், அவர் நிறைய இழக்க நேரிடும்” என எச்சரித்துள்ளார். இதற்கிடையே அதிபர் ட்ரம்பின் நெருங்கிய நண்பராய் வலம் வரும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை, கைது செய்ய உத்தரவிடுவேன் எனக் கூறியிருப்பது பேசுபொருளாகியுள்ளது. ஏனெனில், மத்திய கிழக்கிற்கு வெளியே மிகப்பெரிய யூத மற்றும் பாலஸ்தீன மக்கள்தொகை கொண்ட நகரங்களில் ஒன்று நியூயார்க்கில் உள்ளது.
”இஸ்ரேல் பிரதமரைக் கைது செய்வேன்” - உறுதியளித்த ஜோஹ்ரான் மம்தானி
அந்த வகையில், ஜோஹ்ரான் மம்தானி, மேயர் பிரசாரத்தின்போது அளிக்கப்பட்ட இந்த வாக்குறுதி, ஜனவரி 1ஆம் தேதி நெதன்யாகு அதிகாரப்பூர்வமாக நியூயார்க் நகரத்திற்கு அழைக்கப்பட்டதன் மூலம் பேசுபொருளாக மாறியுள்ளது. அன்று நியூயார்க் நகர (NYC) மேயராக மம்தானி பதவியேற்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குடியரசுக் கட்சித் தலைவரும் நகர சபைப் பெண்ணுமான இன்னா வெர்னிகோவ், நெதன்யாகுவை நியூயார்க் நகரத்திற்கு அழைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மம்தானி போன்ற வெட்கமற்ற மார்க்சிய தீவிரவாதிகளின் மோசமான வார்த்தைஜாலங்கள் இருந்தபோதிலும், இந்த நகரம் இஸ்ரேல், யூத மக்கள் மற்றும் நமது இரு பெரிய நாடுகளை ஒன்றிணைக்கும் கொள்கைகளுடன் நிற்கிறது என்பதை உங்கள் வருகை ஒரு சக்திவாய்ந்த நினைவூட்டலாக இருக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கடந்த மாதம் பத்திரிகையாளர் ஒருவரிடம் பேசிய ஜோஹ்ரான் மம்தானி, ”நியூயார்க்கிற்கு நெதன்யாகு வரும் பட்சத்தில் அவரைக் கைது செய்வது உறுதி” எனத் தெரிவித்துள்ளார். காஸாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்காக போர் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை எதிர்கொண்டுள்ள நெதன்யாகுவுக்கு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கைது வாரண்ட் பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதைத்தான், மம்தானி இப்போது நிறைவேற்ற முன்வருவதாகக் கூறப்படுகிறது. இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த, அதேசமயம் கம்யூனிஸ்டாக அறியப்படும் மம்தானி, அதிபர் ட்ரம்புடன் முரண்பாடு கொண்டுள்ளார். அதேபோல் மம்தானி, பாலஸ்தீனர்களின் ஆதரவாளர்களாகவும் இஸ்ரேலியர்களின் எதிர்ப்பாளர்களாகவும் அறியப்படுகிறார்.
நெதன்யாகுவை மம்தானி கைது செய்வது சாத்தியமாகுமா? சட்டத்தின் பார்வைகள் என்ன?
இந்த நிலையில்தான் நெதன்யாகுவின் கைது விவகாரம் சூடுபிடித்துள்ளது. ஆனால், உண்மையில் இது சாத்தியமா என்பது கேள்விக்குறியே? காரணம், அதில் நிறைய தடைகள் உள்ளன. குறிப்பாக, ட்ரம்ப் நிர்வாகம் ஐ.சி.சி-க்கு வெளிப்படையாக விரோதமாக இருந்து வருகிறது. 2024ஆம் ஆண்டில், நெதன்யாகுவுக்கு எதிரான வாரண்டிற்கு பதிலளிக்கும் விதமாக அது நீதிமன்றத்தின் மீது தடைகளை விதித்தது. இந்த நடவடிக்கை ஒரு அமெரிக்க நகரத்தின் எந்தவொரு அமலாக்க முயற்சியையும் தடுப்பது வரை நிச்சயமாக நீட்டிக்கப்படும். மேலும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் அமெரிக்கா கையெழுத்திடவில்லை.
அதாவது, அமெரிக்க எல்லைக்குள் ஐ.சி.சி.க்கு எந்த அதிகார வரம்பும் இல்லை. இதனால், சர்வதேச கைது வாரண்டை செயல்படுத்துவதற்கான எந்தவொரு உள்ளூர் முயற்சியையும் பல கூட்டாட்சி சட்டங்கள் தடுக்கும். அமெரிக்க அரசியலமைப்பு, வெளியுறவு விவகாரங்கள் மீதான அதிகாரத்தை, கூட்டாட்சி அரசாங்கத்திற்கு வழங்குகிறது. இந்த அதிகாரத்தை அமெரிக்க நீதிமன்றங்கள் மீண்டும் மீண்டும் நிலைநிறுத்துகின்றன. நடைமுறையில், இதன் பொருள் நியூயார்க் நகர அதிகாரிகள் நெதன்யாகுவை கைது செய்ய முயற்சித்தாலும், கூட்டாட்சி நிறுவனங்கள் அந்த நடவடிக்கையை மீற முடியும். உண்மையில், நெதன்யாகுவைக் கைது செய்ய ஆணையிடும் அதிகாரம் மம்தானிக்கு இருந்தாலும் அதை முழுவதுமாகச் செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. ஆனாலும், அவருடைய உறுதியான பேச்சு, உலகின் அடையாளமாக மாறியிருக்கிறது என்றே சொல்லலாம்.

