அமெரிக்கா | கலிஃபோர்னியா ஆளுநர் தேர்தல்.. கமலா ஹாரிஸுக்கு பெருகும் ஆதரவு!
அமெரிக்கா அதிபராக ஜோ பைடன் இருந்த காலத்தில், துணை அதிபராக இருந்தவர் இந்திய வமசாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ். இவர், சமீபத்திய அதிபர் தேர்தலிலும் ட்ரம்ப்க்குப் போட்டியாக களமிறக்கப்பட்டார். அவருக்கு எதிராக கமலா ஹாரீஸ் கடுமையான போட்டியாளராக இருந்தாலும் இறுதியில் தோல்வியைத் தழுவினார்.
இந்த நிலையில், கமலா ஹாரிஸ், கலிஃபோர்னியா மாநிலத்தின் அடுத்த ஆளுநராவதற்கு ஆதரவு பெருகி வருகிறது. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இர்வின் சமூகச் சூழலியல் பள்ளியின் புதிய கருத்துக்கணிப்பின்படி கமலா ஹாரிஸ், கலிஃபோர்னியாவின் 2026 ஆளுநர் பதவிக்குப் போட்டியிட முடிவு செய்தால் அவர் வெற்றிபெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிக் கருசோ (9 சதவீதம்) மற்றும் பல தற்போதைய மற்றும் முன்னாள் கலிபோர்னியா அலுவலக நிர்வாகிகள் உட்பட அறிவிக்கப்பட்ட மற்றும் சாத்தியமான ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு மத்தியில் ஹாரிஸுக்கு 24 சதவீத ஆதரவு இருப்பதாக கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. குறிப்பாக, குடியரசுக் கட்சியினருடன் நேரடிப் போட்டியில் ஹாரிஸ் சிறப்பாகச் செயல்படுவதாகவும், இதனாலேயே அவருக்கு ஆதரவு பெருகுவதாகவும் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. எனினும், ஹாரிஸ் இன்னும் போட்டியில் பங்கேற்கவில்லை, ஆனால் கோடை இறுதிக்குள் ஒரு முடிவை எடுப்பார் என்று கூறப்படுகிறது. அவர் நீண்டகால ஆதரவாளர்கள் மற்றும் நன்கொடையாளர்களுடன் ஆலோசித்து வருகிறார்.