அமெரிக்கா | வெடிக்கும் போராட்டம்.. ட்ரம்ப் - ஆளுநர் வலுக்கும் மோதல்! என்னதான் நடக்கிறது?
அமெரிக்காவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான லாஸ் ஏஞ்சலிசில் சட்டவிரோத குடியேறிகளை களையெடுக்கும் விவகாரம் அரசியல் அனலாக மாறி தகிக்க தொடங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் கலிஃபோர்னியா ஆளுநர் கேவின் நியூசம்மும் மாறிமாறி குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். தங்கள் அனுமதியின்றி லாஸ் ஏஞ்சலிசிற்கு மத்திய படைகளை அனுப்பியது மூலம் நாட்டின் ஜனநாயக பண்புகளையே அதிபர் சிதைத்து விட்டார் என நியூசம் குற்றஞ்சாட்டியுள்ளார். இன்று கலிஃபோர்னியாவுக்கு நடந்தது நாளை மற்ற மாநிலங்களுக்கு நடக்கும் என்றும் ஆளுநர் நியூசம் கூறியுள்ளார். ஆனால் தான் மத்திய படைகளை அனுப்பியிருக்காவிட்டால் போராட்டக்காரர்கள் லாஸ் ஏஞ்சலிசை சூறையாடி சாம்பலாக்கியிருப்பார்கள் என ட்ரம்ப் பதிலளித்துள்ளார்.
லாஸ் ஏஞ்சலிஸ் ரவுடிகள் ராஜ்ஜியமாகி விட்டதாகவும் கட்டுப்பாடின்றி வெளிநாட்டவர்களை மாநில அரசு அனுமதித்ததுதான் இதற்கு காரணம் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார். இதற்கிடையே லாஸ் ஏஞ்சலிசில் அரசின் சோதனைகளை எதிர்த்து சட்டவிரோத குடியேறிகள் நடத்தும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. வாகனங்கள் கடைகளுக்கு தீ வைக்கப்படும் நிலையில் சில இடங்களில் கடைகளுக்குள் உழைந்து பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. நிலைமை கை மீறிச்செல்வதால் பதற்றமான இடங்களில் மேயர் கேரன் பாஸ் (KAREN BOSS) ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். மற்றொரு அதிர்ச்சி செய்தியாக லாஸ் ஏஞ்சலிஸ் போராட்டங்கள் அமெரிக்காவின் பிற நகரங்களுக்கும் பரவத்தொடங்கியுள்ளது. நியூயார்க், சிகாகோ, சான் பிரான்சிஸ்கோ, சியாட்டில், டென்வர், ஆஸ்டின், டாலஸ், பாஸ்டன், அட்லாண்டா என பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.