அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் வருகைக்கு ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு குரல் எழுப்பியும் தென்கொரியாவில் தனித் தனியாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நாளை தென்கொரியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். இதைமுன்னிட்டு தென்கொரியா தலைநகர் சியோலில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பாக கூடிய புத்த மதத்தினரும், உள்ளூர் அமைப்பினரும் ஒன்று சேர்ந்து ட்ரம்பின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது வடகொரியாவுக்கு அழுத்தம் கொடுப்பதை விட்டுவிட்டு, அதிபர் ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
அதேசமயம் மற்றொரு குழுவினர் ட்ரம்பின் வருகைக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க கொடிகளை அசைத்தும், தென்கொரிய தேசிய கீதத்தை இசைத்தும் பேரணி நடத்தினர். நாளை தென்கொரியாவுக்கு செல்லவுள்ள ட்ரம்ப், வடகொரியாவின் அணு ஆயுத திட்டங்கள் குறித்தும் விரிவாக விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ட்ரம்ப் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.