திட்டமிட்டு கிளப் செய்த வேலை... 90 நிமிடங்களில் 22 முறை மது அருந்திய நபருக்கு நேர்ந்த கதி!

வெளிநாடுகளில் மதுபான விடுதிகளில் நுழையும் நபர்களை, அதிகளவில் குடிக்கச் செய்து அவர்களுடைய பொருட்களைத் திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மதுபானம்
மதுபானம்file image

நம் நாட்டில் இருக்கும் மதுபான விடுதிகளைப் போன்றே வெளிநாடுகளிலும் மதுபான விடுதிகள் இருக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே. என்றாலும், அங்கு செல்லும் நபர்களை, அதிகளவில் குடிக்கச் செய்து அவர்களுடைய பொருட்களைத் திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்படி, ஒருவர் மதுபான விடுதிக்குள் சென்று தன் பணத்தையும் இழந்ததுடன், மரணத்தையும் தழுவியிருக்கிறார் என்பதுதான் அதிர்ச்சிக்குரிய விஷயமாக உள்ளது.

பிரிட்டனை சேர்ந்த சுற்றுலப் பயணியான 36 வயதான மார்க் காக்ஸ் என்பவர், போலந்துக்குச் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு தன் நண்பருடன் இணைந்து மது அருந்தி உள்ளார். அந்த மயக்கத்திலேயே கிராகோவில் உள்ள வைல்ட் நைட் ஸ்ட்ரிப் அவர் கிளப்புக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது கிளப்பில் இருந்த பணியாளர்கள் மது அருந்தும்படி, மார்க்கிடம் கூறியதாகத் தெரிகிறது. ஆனால் அவர், தான் ஏற்கெனவே போதையில் இருப்பதால் மது வேண்டாம் என வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் தொடர்ந்து கொடுக்கவே அவரும் வாங்கி அருந்தியுள்ளார்.

மதுபானம்
மதுபானம்file image

இப்படி, 90 நிமிடங்களில் அவருக்கு 22 மதுபான கோப்பைகள் பருக வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மேலும் அவருக்கு போதை அதிகமாகி அப்படியே சரிந்துள்ளார். ஆனால், அதன்பின்னரும் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாத அந்த கிளப் நிர்வாகத்தினர், மாறாக அவரிடமிருந்த 2,200 பவுண்ட்டைத் (ரூ. 42,816) திருடிச் சென்றுள்ளனர்.

ஆனால், போதையில் சரிந்து விழுந்த மார்க்கின் உயிர் அத்துடன் பிரிந்துவிட்டது. அவருடைய மரணத்துக்குக் காரணம், மார்க்கின் ரத்தத்தில் ஆல்கஹால் சதவீதம் 0.4 என்ற அளவில் இருந்ததே எனச் சொல்லப்படுகிறது.

இது, மரணம் விளைவிக்கக்கூடியது என போலந்து தேசிய வழக்கறிஞர்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் 2017இல் நடைபெற்றிருந்தாலும், தற்போதுதான் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, இவ்வழக்கு தொடர்பாக இதுவரை 58 பேரை போலந்து போலீசார் கைது செய்துள்ளனர். அதேநேரத்தில், இந்த கிளப்புக்கு எதிராக தற்போது 700க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

இறப்பு
இறப்புfile image

இதுகுறித்து போலந்து காவல் துறையினர், “மதுபான கிளப்களில், தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறோம். இதுவரை 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள்.

இந்த கிளப்புகளே சில நபர்களை வைத்துக்கொண்டு, வாடிக்கையாளர்களை நன்றாகக் குடிக்கும்படி செய்துவிட்டு, பின்னர் அவர்களிடம் இருந்து பணம், பொருட்களைத் திருடிக் கொள்கிறது.

இந்த சம்பவத்தில் அந்த நபருக்கு மருத்துவ உதவி உரிய நேரத்தில் வழங்கப்படவில்லை. போதை அதிகரித்து, சுயநினைவை அவர் இழந்துள்ளார். ஆல்கஹால் சேர்ந்து நஞ்சாகி மரணம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மார்க்ஸின் சகோதரியான சமந்தார், “என் சகோதரர் முதலில் போதையில் இருந்தார் என்று சொல்வதில் உண்மையில்லை. என் சகோதரனின் மரணத்திற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. இந்த கிளப்புக்கு எதிரான என் சகோதரனின் மரணம் ஒரு விழிப்புணர்வாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com