32ஆயிரம் ஊழியர்களை தற்காலிகமாக இடைநீக்கம் செய்யும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்!
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் தங்களது பணியாளர்கள் 32 ஆயிரம் பேரை தற்காலிகமாக இடைநீக்கம் செய்கிறது.
இது தொடர்பாக கடந்த ஒரு வாரமாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் மற்றும் அதன் தொழிலாளர் சங்கங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு நாடுகள் சர்வதேச விமான சேவையை ரத்து செய்துள்ளன. இதனால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் உள்ளிட்ட பன்னாட்டு விமான நிறுவனங்கள் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளன. தற்காலிகமாக ஊழியர்களை குறைக்கும் நடவடிக்கையில் இறங்கிய பிரிட்டிஷ் ஏர்வேஸ், இது தொடர்பாக கடந்த சில தினங்களாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
அதன்முடிவில், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமான குழு உறுப்பினர்கள், பொறியாளர்கள், தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் என சுமார் 32 ஆயிரம் பேரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்ய உடன்பாடு ஏற்பட்டது.
பணிநீக்கத்தில் இருந்தாலும், அரசின் கொரோனா வைரஸ் திட்டப்படி, இவர்கள் வாங்கி வந்த 80 சதவிகித ஊதியம் கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் லண்டன் ஹீதுரு விமான நிலையம், ஆட்கள் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது.