சட்டென உயரத்தை குறைத்த விமானம் : இங்கிலாந்தில் அடுத்த அதிர்ச்சி... என்ன ஆனது விமானத்துக்கு?
இங்கிலாந்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் BA295 விமானம் 37,000 அடி உயரத்தில் இருந்து 9,000 அடி உயரத்திற்கு திடீரென இறங்கியது. விமானிகள் அவசர சிக்னல் அனுப்பி, விமானத்தை லண்டனில் பாதுகாப்பாக தரையிறக்கினர். சம்பவத்தின் காரணம் குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் இல்லை.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் 70-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற Boeing 737 விமானத்தில் பெரும் அசம்பாவிதம் நடைபெற்றது. துணை விமானி கேப்டனை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி விமானத்தை கடத்த முயன்றுள்ளார்.
இந்த சம்பவத்தின்போது 34,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானம் மிகக் குறுகிய நேரத்தில் சுமார் 14,000 அடி வரை திடீரென கீழே இறங்கியுள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இறுதியில் கேப்டன் மற்றும் பயணிகளின் உதவியோடு துணை விமானி கட்டுப்படுத்தப்பட்டு, விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
இந்த சம்பவம் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்று திடீரென 37 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து 9,000 அடி உயரத்திற்கு இறங்கியுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் இருந்து அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் BA295 பயணிகள் விமானம் சென்றுகொண்டிருந்தது.
இந்த விமானம் அயர்லாந்து வான்வெளியில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென விமானிகள் உடனடியாக விமானக் கட்டுப்பாட்டு மையத்திற்குப் பொது அவசர நிலையைக் குறிக்கும் '7700' சிக்னலை அனுப்பி விமானத்தின் உயரத்தை சட்டென குறைத்துள்ளனர்.
தொடர்ந்து இந்த விமானம் லண்டனுக்கே திருப்பி பாதுகாப்பாக தரையிறங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. எனினும் விமானம் அவசரமாகக் கீழே இறக்கப்பட்டதற்கான துல்லியமான காரணம் மற்றும் விமானத்தின் தற்போதைய நிலை குறித்துப் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

