விவாகரத்து நாளில் டேட்டிங் செய்ய அழைத்த ட்ரம்ப்.. விழாவில் நினைவுகூர்ந்த பிரிட்டிஷ் நடிகை!
ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்ற லோகார்னோ திரைப்பட விழாவில் பிரிட்டிஷ் நடிகை எம்மா தாம்சனுக்கு (66) லெப்பர்டு கிளப் விருது வழங்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி நடைபெற்ற இந்த விழாவில் பேசிய எம்மா தாம்சன், 1998ஆம் ஆண்டு 'பிரைமரி கலர்ஸ்' நாடகத்தைப் படமாக்கும்போது ட்ரம்பிடமிருந்து தனக்கு வந்த ஆச்சர்யமான அழைப்பை நினைவுகூர்ந்தார். அப்போது பேசிய அவர், “1998-இல் ஒருநாள் இரவில் விருந்துக்கு அழைப்பு விடுத்து, என்னை ட்ரம்ப் தொடர்புகொண்டார். அவரது இடத்தில் நான் தங்குவதை அவர் விரும்புவதாகக் கூறினார். ஆனால், அவர் ட்ரம்ப்தான் என்று நான் நம்பவில்லை. இருப்பினும், நான் அவரை மீண்டும் அழைப்பதாகக் கூறிவிட்டேன். மேலும், அதே நாளில்தான் நான் விவாகரத்து பெற்றிருந்தேன். ஒருவேளை, நான் ட்ரம்புவுடன் விருந்துக்குச் சென்றிருந்தால், இன்று உங்களிடம் சொல்வதற்கு ஏதேனும் கதையும் எனக்கு கிடைத்திருக்கும். அமெரிக்காவின் போக்கையும் நான் மாற்றியிருக்கலாம்” எனப் பேசினார். அவருடைய இந்தக் கருத்து பேசுபொருளாகியுள்ளது.
நடிகர் கென்னத் பிரானாவைத் திருமணம் செய்துகொண்ட எம்மா தாம்சன், 1989 முதல் 1995 வரை அவருடன் இணைந்து வாழ்ந்தார். அதன்பிறகு அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். பின்னர் அவர் 2003இல் கிரெக் வைஸை மணந்தார். எம்மா தாம்சன், ஆஸ்கார் விருது பெற்ற நடிகையும் ஆவார்.