பிரட்டன் இளவரசர் சார்லஸின் மியான்மர் பயணம் ரத்து?
மியான்மரில் ரோஹிங்யா இன இஸ்லாமியர்களுக்கு எதிராக நடந்து வரும் வன்முறை காரணமாக, அந்நாட்டுக்கு பிரிட்டன் இளவரசர் சார்லஸ் மேற்கொள்ளவிருந்த சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டன் அரசு சார்பில் இளவரசர் சார்லஸ் தெற்காசிய நாடுகளில் இம்மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்றும், அப்போது மியான்மர் நாட்டுக்கு செல்வார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ரோஹிங்யா இன இஸ்லாமியர்களுக்கு எதிராக நீடித்து வரும் வன்முறை காரணமாக மியான்மர் செல்லும் திட்டத்தை அவர் கைவிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய திட்டத்தின்படி மனைவி கமீலாவுடன் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்குச் செல்லும் இளவரசர் சார்லஸ், இந்தியாவிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்து பேசுவார் என கூறப்படுகிறது.