ஆண் என்ன பெண் என்ன ஒரே சம்பளம்தான்... இங்கிலாந்து, பிரேசில் அணிகள் அறிவிப்பு
உலகம் முழுவதும் பாலின சமத்துவம் என்பது குடும்பத்தில் தொடங்கி பணியிடங்கள், அரசியல், ஆட்சி வரை மெல்ல மாற்றங்கள் நடந்துவருகின்றன. அது கால்பந்து விளையாட்டிலும் தொடங்கியுள்ளது.
அதாவது, இங்கிலாந்து மற்றும் பிரேசில் கால்பந்து அணிகளில் ஆடும் பெண்கள், ஆண்கள் இருவருக்கும் ஒரேவிதமான ஊதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு விளையாட்டு உலகில் உற்சாகத்தை விதைத்துள்ளது.
கடந்த வாரத்தில் பிரேசில் கால்பந்து அமைப்பு, தேசிய கால்பந்து அணியில் விளையாடும் ஆண், பெண் வீரர்களுக்கு ஊதியம் மற்றும் போனஸ் இரண்டும் ஒரே மாதிரி வழங்கப்படும் என அறிவித்தது. அடுத்தகட்டமாக இங்கிலாந்து கால்பந்து அமைப்பும் , தங்கள் அணியில் விளையாடும் வீரர்களுக்கும் சமமான ஊதியம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
பிரேசில் கால்பந்து கூட்டமைப்பு (சிபிஎஃப்) ஆஸ்திரேலியா, நார்வே மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுடன் இணைந்து தங்கள் நாட்டு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சமமான ஊதியத்தை வழங்கும் முடிவை எடுத்துள்ளது. "இங்கு பாலின வேறுபாடுகள் கிடையாது. பிரேசில் கால்பந்து கூட்டமைப்பு ஆண்கள், பெண்களை சமமாகவே நடத்துகிறது" என்கிறார் அதன் தலைவர் ரோஜேரியே காபோக்லோ. ஆஸ்திரேலிய கால்பந்து அணியிலும் ஊதியத்தில் ஆண்கள் - பெண்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்கும் வகையில் ஒரு முடிவுக்கு தற்போது வந்துள்ளதாக கூறப்படுகிறது.