ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும் பிரிட்டன்.. தனி நாடாக புது அத்தியாத்தை தொடங்குகிறது..!

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும் பிரிட்டன்.. தனி நாடாக புது அத்தியாத்தை தொடங்குகிறது..!
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும் பிரிட்டன்.. தனி நாடாக புது அத்தியாத்தை தொடங்குகிறது..!

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் தனிநாடாக பிரியும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரெக்ஸிட் இன்று நிகழ உள்ளது.

2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரிட்டனில் மிக முக்கியமான பொதுவாக்கெடுப்பு நடந்தது. இதில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என பெரும்பாலான மக்கள் வாக்களித்தனர். இதன் பிறகு பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவதில் பல சிக்கல்கள் ஏற்பட அங்கு அடுத்தடுத்த அரசியல் மாற்றங்களும் ஆட்சி மாற்றங்களும் நிகழ்ந்தன. டேவிட் கேமரன், தெரசா மே உள்ளிட்டோர் பிரதமர் பதவியில் இருந்து விலக நேரிட்டது. தீவிர வலதுசாரியான போரிஸ் ஜான்சன் பிரதமரானார். பிரெக்ஸிட்டை நிறைவேற்றியே தீருவேன் என்ற தனது வாக்குறுதியை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார்.

பிரெக்ஸிட்டை பற்றி அறிவதற்கு முன்பு ஐரோப்பிய ஒன்றியம் குறித்து தெரிந்து கொள்வது அவசியம். ஐரோப்பிய ஒன்றியம் பிரிட்டன், டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட 28 நாடுகளை உள்ளடக்கிய ஒரு அமைப்பு. 28 நாடுகளுக்கும் இடையே தடையற்ற வர்த்தகம் , மக்கள் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு பணிக்கு செல்வது, தங்கு தடையின்றி குடியேறுவது போன்ற சுதந்திரம் உள்ளது. 1973-ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்த பிரிட்டன் 2020-ஆம் ஆண்டு அந்த அமைப்பில் இருந்து விலகுகிறது. பிரெக்ஸிட் நிறைவேறிய பிறகு இதன் பின்னர் என்ன நடக்கும் என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

பிரிட்டன் தனிநாடாக பிரிந்தாலும் அதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள 11 மாதங்கள் அளிக்கப்படும். அதாவது இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி ஐரோப்பிய ஒன்றியம் பிரிட்டன் இடையிலான அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்படும். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதால் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள 73 பிரிட்டன் எம்பிக்கள் தங்கள் பதவியை இழப்பர். அதாவது ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியலமைப்புகள் அனைத்தில் இருந்தும் பிரிட்டன் விலகிவிடும். வழக்கமாக நடைபெறும் ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பங்கேற்கமாட்டார்.

வர்த்தக உறவு குறித்து மற்ற நாடுகளுடன் பிரிட்டன் அரசு சுதந்திரமான பேச்சுவார்த்தையை மேற்கொள்ளும். பிரிட்டன் பாஸ்போர்ட்டுகள் மீண்டும் நீல நிறத்திலேயே விநியோகிக்கப்படும். பிரெக்ஸிட்டை கொண்டாடும் வகையில் ஜனவரி 31-ஆம் தேதி என பொறிக்கப்பட்ட சிறப்பு நாணயங்கள் புழக்கத்தில் விடப்படும். பிரெக்ஸிட் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 2016-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு கலைக்கப்படும். பிரிட்டனை சேர்ந்தவர்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலோ அல்லது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்தவர்கள் பிரிட்டனிலோ வசிப்பதிலோ அல்லது பணியாற்றுவதிலோ எவ்வித தடையும் இருக்காது. தனிநாடாக பிரிட்டன் தனது புதிய அத்தியாயத்தை தொடங்க உள்ளது. பிரிட்டன் வெளியேறுவதன் மூலம் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 27ஆக குறைகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com