சுட்டெரிக்கும் வெப்பம்.. ஆண்டு முழுவதும் குளிர்ச்சி.. ஜிட்ரிநிகா குகையை நாடும் மக்கள்!
தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள பால்கன் குடாப்பகுதியில் அமைந்துள்ள நாடு, போஸ்னியா. உலகம் முழுவதும் கடுமையான வெப்ப அலை வீசி வரும் நிலையில், போஸ்னியாவிலும் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் சுட்டெரிக்கிறது. இதிலிருந்து தப்பிக்க, அங்குள்ள மக்கள் பலரும் பல்வேறு வழிகளைத் தேடிவரும் நிலையில், தெற்கு போஸ்னியாவின் தினாரிக் மலைத் தொடரில் அமைந்துள்ள ஜிட்ரிநிகா குகை (Vjetrenica Cave), மக்களைக் குளிர்வித்து வருகிறது. போஸ்னியாவின் மிகப்பெரிய குகையான இதன் நீளம் சுமார் 7,014 மீட்டர்கள் (7.01 கி.மீ) ஆகும். குகையினுள் பல நிலத்தடி ஆறுகள், நீரோடைகள் மற்றும் ஏரிகள் இருப்பதால், ஆண்டின் அனைத்து நாட்களிலும் இக்குகையின் உட்புற வெப்பநிலை மாறாமல் 11°செல்சியஸிலேயே உள்ளது.
மேலும், இதன் நுழைவாயிலில் சக்திவாய்ந்த காற்று வீசுவதால் இது ஜிட்ரிநிகா குகை என்று அழைக்கப்படுகிறது. தமிழில் இதற்கு ’காற்றுக் குகை’ என்பதே பொருளாகும். இந்தக் குகையில் ஆண்டு முழுவதும் நிலையாக 52 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையே நிலவுவதால் கோடைக்கால வெப்பத்துக்கு நடுவே இயற்கை ஏசியாக கருதப்படுகிறது. இது யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில்தான், தெற்கு போஸ்னியா மற்றும் ஹெர்ஸகோவினாவில் வீசி வரும் கடுமையான வெப்ப அலையின் காரணமாக, மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஜிட்ரிநிகா குகையை (Vjetrenica Cave)தஞ்சமடையும் இடமாகப் பயன்படுத்தி வருகின்றனர். தீவிரமடைந்து வரும் வெப்ப அலைகளால், இக்குகையை ஆண்டுதோறும் 21,000-க்கும் மேற்பட்டோர் பார்வையிடுகின்றனர். இதில், பாதிக்கும் மேற்பட்டோர், அந்தக் குகையைக் கோடைக்காலத்திலேயே பயன்படுத்துகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

