ஓடிடி திரைப் பார்வை: உலகை நோக்கி காஸா குழந்தைகள் எழுப்பும் வலிமிகு கேள்வி - ’Born In Gaza’

ஓடிடி திரைப் பார்வை: உலகை நோக்கி காஸா குழந்தைகள் எழுப்பும் வலிமிகு கேள்வி - ’Born In Gaza’
ஓடிடி திரைப் பார்வை: உலகை நோக்கி காஸா குழந்தைகள் எழுப்பும் வலிமிகு கேள்வி - ’Born In Gaza’

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையிலான யுத்தம் மனிதகுல வரலாற்றுப் பயணத்தில் இறக்கி வைக்க முடியாத பெரும் பாரமாக அமைந்துவிட்டது. 2014ஆம் ஆண்டு நடைபெற்ற இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையிலான மோதலில் பெரியளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. பலர் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்தனர். குடும்பத்தை தொலைத்தனர். நூற்றுக்கணக்கான குழந்தைகள் தங்களது பெற்றோரை இழந்தனர். அப்போது பாதிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் காஸா பகுதி குழந்தைகளின் இழப்புகளையும் அழுகுரலையும் ஏக்கத்தையும் பதிவு செய்கிறது பார்ன் இன் காஸா (Born in Gaza) எனும் இந்த ஆவணப்படம்.

காஸாவின் கடற்கரை கிராமமொன்றில் துவங்கும் காட்சியில் சிறுவன் முஹமத் பேசுகிறார். யுத்தத்தில் தங்களது குடும்பம் பெரிய இழப்புகளை சந்தித்ததால் தான் மேற்கொண்டு பள்ளிக்குச் செல்லாமல் குடும்பத்திற்காக சாலையில் வேலை செய்து வருவதாகக் கூறுகிறார். மேலும் தொடரும் காட்சிகளில் அவருடைய குடும்பப்பின்னனி குறித்து பதிவு செய்யப்பட்டிருக்கிறது. முஹமத்திற்கு இரண்டு மாற்றுத் திறனாளி சகோதரிகள் உள்ளனர். அவர்களையும் தாங்கிச் சுமக்கும் பொறுப்பிலிருக்கும் அச்சிறுவன் தனது குதிரை வண்டியில் குழந்தைமனத்துடன் பறக்கிறார். அந்த ஸ்லோ மோசன் காட்சி நம் மனதை ஏனோ கணப்படுத்திவிடுகிறது.

2014ஆம் ஆண்டு இஸ்ரேல் படைக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புக்கும் இடையில் நடந்த மோதலின் விளைவுகள் குறித்த வேதனைகளை எழுதிமாளாது. அச்சூழலில் 24000 குடும்பங்கள் அவர்களின் சொந்த நிலத்திலிருந்து வெளியேற நிர்பந்திக்கப்பட்டனர் என்றும் காஸாவின் 42000 ஏக்கர் விளைநிலங்கள் சேதமானது என்றும் பதிவு செய்கிறது பார்ன் இன் காஸா (Born in Gaza) எனும் இந்த ஆவணப்படம்.

இந்த ஆவணப்படத்தில் மமூத், இஸ்மாயில், ஷாகாரியா, அஹெத் என பல சிறுவர் சிறுமிகள் தோன்றி யுத்த காலத்தில் தாங்கள் நேரில் பார்த்த துயரகாட்சிகளை நமக்கு விவரிக்கின்றனர். அவர்களில் ஒரு சிறுவன் தனது 20 வயது அண்ணன் தன் கண் முன்னேயே வெடிகுண்டு வெடித்து உடல் சிதறி இறந்ததை நினைவு கூர்ந்து உடைந்து அழுகிறான். மேலும் பேசும் சிறுவன் உடாய் தனது அண்ணன் இறந்த நிகழ்வு அடிக்கடி தன் கனவில் வந்து பயமுறுத்துவதாகவும் தன்னால் அதனை மறக்க இயலவில்லை என்றும் பதிவு செய்கிறார். வேதனை தாங்காமல் தான் ஒரு முறை மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் ஆனால் தன் அம்மா கவனித்து தடுத்து விட்டதாகவும் தனக்கு வாழவே விருப்பம் இல்லை எனவும் சொல்லும் அந்த பிஞ்சு குரல் நம்மை நடுங்கச் செய்கிறது. தனது டி- சர்டை உயர்த்தி தனது வயிற்றில் பாய்ந்த குண்டுகளின் தடத்தை காட்டும் சிறுவன் கொடுக்கும் குற்ற உணர்ச்சி நம்மை நிலை குலைய வைக்கிறது.

இந்த ஆவணப் படத்தில் பேசும் குழந்தைகள் பயன்படுத்தும் சொற்களில் பெரிய முதிர்ச்சி இருப்பதை உணர முடிகிறது. 12 வயதே ஆன சிறுவன் மமூத் ‘2001 முதல் 2014 வரை தங்களது நிலத்தில் இஸ்ரேல் படையினர் 11 முறை தாக்குதல் நடத்தினர். நாங்கள் மிகவும் கடினமாக உழைத்து உருவாக்கிய எங்கள் நிலம் பாழ்பட்டுவிட்டது.’ என்று சொல்லி கண்கலங்கும் அவனது அடுத்த வார்த்தைகள் நம்மை முகத்தில் அறைகின்றன ‘எங்களால் காய்கறிகளை விளைவிக்க முடியும் குண்டுகளை அல்ல’.

2014 யுத்த வெறியாட்டத்திற்கு பிறகு 80 சதவிகித காஸா மக்களின் வாழ்க்கையானது மனித நேய ஆர்வலர்களின் உதவியினை நம்பியே இருக்கிறது. தொழில்கள் இல்லை. பள்ளிகள் சேதமடைந்து விட்டன. குழந்தைகள் பெரிய உளவில் பாதிப்புகளுக்கு ஆளாகிவிட்டனர்.

காஸாவின் ரபாத் சிட்டியில் நடந்த தாக்குதலில் 6 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களும் 13 மருத்துவப்பணியாளர்களும் கொல்லப்பட்டனர். அதனை பதிவு செய்திருக்கிறது இந்த ஆவணப்படம். இறந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களில் ஒருவரது 10 வயது மகன் இந்த ஆவணப்படத்தில் பேசி இருக்கிறார். அவர் நம்மைப் பார்த்துக் கேட்கிறார் “என்னோட அப்பா மத்தவங்க உயிர காப்பாத்த தானா ஆம்புலன்ஸ் ஓட்டினாங்க., யாராவது ஆஸ்பிடல் மேலயும் ஆம்புலன்ஸ் மேலயும் குண்டு போடுவாங்களா...?” அந்த கேள்விகள் நம்மை தலைகுனியச் செய்கின்றன.

மேலும் யபாலியா பெண்கள் பள்ளி சேதமடைந்தது குறித்து அப்பள்ளி மாணவி எழுப்பும் கேள்வியும் அதுவே “யாராவது குழந்தைகள் படிக்கும் பள்ளிக் கூடம் மேல குண்டு போடுவாங்களா...?” இப்படியாக நீள்கின்றன குழந்தைகள் நம்மை நோக்கிக் கேட்கும் கேள்விகளும். அவர்களது மனவேதனைகளும்.

பாலஸ்தீன கப்பல்கள் கரையிலிருந்து 6 மைல் தொலைவு வரை மட்டுமே செல்ல அனுமதியுண்டு அப்படி இருக்கும் போது மீன்வளத்தை நம்பி அங்குவாழும் 3600 குடும்பங்கள் எப்படிப் பிழைக்க முடியும் என்பன போன்ற கேள்விகளையும் முன்வைத்துப் பேசுகிறது இந்த ஆவணப்படம். 2014ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போது மீண்டும் அந்நிலத்தில் நடக்கும் மோதல்கள் நம்மை வேதனையடையச் செய்கின்றன.

தற்போது நெட்பிளிக்ஸில் கிடைக்கும் இந்த ஆவணப்படத்தை இயக்கியவர் இத்தாலியைச் சேர்ந்த ஹெர்னன் ஸின் (Hernán Zin). சமகால சர்வதேச பிரச்னைகளைப் பேசும் மிகமுக்கிய ஆவணப்படமாக இதனைச் சொல்லலாம். காரணம் இது ஒரு யுத்தகாலத்தை எதிர்கொண்ட குழந்தைகளின் நாள்களை ஆவணப்படுத்தி இருக்கிறது. வலிமையான இஸ்ரேலுக்கும் பலவீனமான காஸாவிற்கும் இடையில் நடந்ததை, நடந்துகொண்டிருப்பதை இனி நடக்க வேண்டாம் என நாம் விரும்புவதை யுத்தம் என்று பதிவு செய்யவில்லை இதன் இயக்குநர் ஹெர்னன் ஸின் மாறாக “This Documentary was filmed during the offensive of israle against gaza in 2014” என்கிறார்.

இந்த ஆவணப்படத்தின் இறுதி ஷாட் (shot) முக்கியமானது காஸாவின் குழந்தைகள் ஒன்று கூடி ஸ்லோமோஷனில் கேமராவை நோக்கி ஓடி வருகின்றனர். உண்மையில் அவர்கள் அன்பின் உஷ்ணம் தேடி உலகின் கரங்களுக்குள் தஞ்சமடைய வருகின்றனர். அவர்களை அள்ளி அணைத்துக் கொள்ளவேண்டியது நமது கடமை. ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியை தீர்மானிப்பவர்கள் குழந்தைகள். ஒரு நாட்டின் மகிழ்ச்சி என்பது குழந்தைகள் பாதுகாப்பில் இருக்கிறது. இந்த உலகம் குழந்தைகளால் ஆனது அவர்களே நம்நிலத்தின் ராஜாக்கள் குழந்தைகளின் உலகை பறித்துவிட்டு நாம் இருந்து சாதிக்கப் போவது எதுவுமே இல்லை. இந்த ஆவணப்படத்தின் மூலம் காஸாவின் குழந்தைகள் ஒருமித்த குரலில் நம்மிடம் கேட்பது ஒன்றே ஒன்று தான் “உலகின் மற்ற நாட்டு குழந்தைகளைப் போல எங்களால் அமைதியாக வாழ முடியாதா...?” காஸா குழந்தைகளின் இந்த கேள்விக்கு என்ன பதில் தரப் போகிறோம்..?

- சத்யா சுப்ரமணி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com