‘அம்மா எழுந்திரி’ - ஆப்கன் குண்டு வெடிப்பில் உயிரிழந்த தாயை எழுப்பிய குழந்தை
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஞாயிறு அன்று பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் இருவர் கொல்லப்பட்டதாகவும், ஐந்து பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியானது. இந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்த இருவரில் ஒருவர் பெண் என தெரியவந்துள்ளது. இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர் சாலையின் ஓரம் தூக்கி வீசப்பட்டிருக்கிறார். சம்பவத்தின் போது அவரது குழந்தைகளும் அவருடன் இருந்துள்ளனர். இருப்பினும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏதும் இல்லை என தெரிவித்துள்ளனர் போலீசார்.
அம்மா உயிரிழந்ததை கூட உணர முடியாத அந்த மழலைகள் ரத்த வெள்ளத்தில் கிடக்கும் தாயை ‘அம்மா எழுந்திரி’ என சொல்வதை உள்ளூர்வாசி ஒருவர் கேமிராவில் பதிவு செய்து, அந்த உருக்கமான காட்சிகளை இணையத்தில் பதிவேற்றியுள்ளார். அது பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அதில் ஒரு குழந்தையின் முகம், கை மற்றும் கால்களிலும் ரத்தம் படிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டு குழந்தைக்களுக்கும் லேசான காயம் இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
அந்த வீடியோவை பார்த்த பலரும் குழந்தைகளுக்கு இணையம் மூலமாக ஆறுதல் சொல்லி வருகின்றனர்.
இதுவரை இந்த குண்டு வெடிப்புக்கு காரணம் நாங்கள் தான் என எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆப்கானிஸ்தானின் தலிபான் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

