"வானமெங்கும் செந்நிறம்" காட்டுத் தீ அபாயத்தில் ஆஸ்திரேலியா !

"வானமெங்கும் செந்நிறம்" காட்டுத் தீ அபாயத்தில் ஆஸ்திரேலியா !
"வானமெங்கும் செந்நிறம்" காட்டுத் தீ அபாயத்தில் ஆஸ்திரேலியா !

எங்கெங்கு காணினும் தீ பிழம்புகள், உயிரை பிடித்துக்கொண்டு தப்பிக்கும் உயிரினங்கள், தாகத்துக்காக ஏக்கத்துடன் மனிதனை எதிர்நோக்கும் கோலா கரடிகள், குட்டிகளை தன் பையில் பத்திரப்படுத்தி தாவி குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட கங்காருகள் என ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதிகள் காட்டுத் தீயால் ஓலமிடுகின்றன.

ஆஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதியில் வேகமாகப் பரவி வரும் காட்டுத் தீ காரணமாக, அந்தப் பகுதியின் முக்கிய நகரங்களில் மின் தடை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், நிலைமையை சமாளிக்க 3,000 ராணுவத்தினா் இப்போது அழைக்கப்பட்டுள்ளனா். உலகெங்கிலும் இருந்து பல நூறு தன்னார்வலர்கள் மனிதனையும், விலங்குகளையும் காக்க வந்துக்கொண்டு இருக்கின்றனர்.

ஆஸ்திரேலியாவில் பரவி வரும் காட்டுத் தீ காரணமாக அந்த நாட்டின் நியூ சௌத் வேல்ஸ், விக்டோரியா ஆகிய மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெப்பநிலை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. பலத்த காற்றும், அதிக உஷ்ண நிலையும் காட்டுத் தீயின் வேகத்தை அதிகரித்துள்ளன.

இந்தக் காட்டுத் தீயில் இரண்டு துணை மின் நிலையங்களும், ஏராளமான மின் கம்பி இணைப்புகளும் சேதமடைந்தன. இதன் காரணமாக, சிட்னி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மின் தடை ஏற்படும் அபாயமுள்ளது. அதையடுத்து, அங்கு நிலைமையை சமாளிப்பதற்காக 3,000 ராணுவத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பா் மாதம் முதல் இந்தக் காட்டுத் தீ காரணமாக 23 போ் உயிரிழந்தனா். 1,500 வீடுகள் அழிந்தன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக 100-க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்ததில் 2 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பும் தீயில் கருகி நாசமாகி உள்ளது. இந்நிலையில் நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மாகாணத்துக்கு புத்தாண்டுக்காக சுற்றுலா சென்றிருந்த நூற்றுக் கணக்கான சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களை ஆஸ்திரேலிய கடற் படையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.

ஆஸ்திரேலியாவில் பயங்கரமாக காட்டுத் தீ பரவி வருவதால் அங்கு வாழும் உயிரினங்கள் அழிந்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். வனப்பகுதியில் சிக்கித் தவிக்கும் விலங்குகளையும் இயற்கை ஆர்வலர்கள் காப்பாற்றி வருகின்றனர். இந்த காட்டில் சிறிய விலங்கான டன்னார்ட் என்ற உயிரினம் ஆஸ்திரேலியாவில் கங்காரு தீவுகளை தவிர வேறு எங்கும் காணப்படுவதில்லை. அவை முற்றிலுமாக அணையக் கூடிய சூழலில் இருக்கிறது.

இந்த தீவிபத்தில் லட்சக்கணக்கான உயிரினங்கள் இறந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. அரிய வகை செடிகள் மற்றும் பூக்களுக்கு பெயர் பெற்ற ஆஸ்திரேலிய காடுகள் 5.8 மீட்டர் ஹெக்டேர் தீப்பிடித்துள்ளது. கங்காரு, பறவைக் கூட்டங்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் பல விலங்கியல் ஆர்வலர்கள் ஆஸ்திரேலிய காடுகளின் நிலையை எண்ணி கவலை தெரிவித்துள்ளனர். கரடி இனங்களில் அழகானதாக கருதப்படும் கோலா கரடிகள் காட்டு தீயால் படும் துன்பம் கண்ணீரை வரவைக்கிறது. இதுபோன்ற அறிய வகை உயிரினங்களை முடிந்தவரை தன்னார்வலர்கள் காப்பாற்றி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com