கறுப்பின சிறுமிக்கு நேர்ந்த அவமானம்! 19 மாதங்களுக்கு பின் மன்னிப்பு கோரிய ’ஜிம்னாஸ்டிக் அயர்லாந்து’

அயர்லாந்தில் நடந்த ஜிம்னாள்டிக் போட்டியின் பதக்க விழாவின் போது மேடையில் இருந்த கறுப்பின பெண் புறக்கணிக்கப்படதாக வீடியோ ஒன்று வைரலான நிலையில், இந்த சம்பவத்திற்கு ’ஜிம்னாஸ்டிக் அயர்லாந்து’ மன்னிப்பு கோரியுள்ளது.
ஜிம்னாஸ்டிக் அயர்லாந்து
ஜிம்னாஸ்டிக் அயர்லாந்து x வலைதளம்

இந்நிகழ்வு கடந்த ஆண்டு மார்ச் 2022 ஆம் ஆண்டு நடந்திருந்தாலும் தற்போது இவ்வீடியோ அதிக அளவில் வைரலாகியுள்ளது. இந்நிலையில், இச்சம்பவம் குறித்து ஜிம்னாஸ்டிக் அயர்லாந்து திங்கள் கிழமை அன்று பொது அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், மன்னிப்பு கேட்டுக் கொண்டதோடு, இதுபோன்ற சம்பவம் இனி நடைப்பெறாது என்று உறுதி அளித்துள்ளது.

மார்ச் 2022 ஆம் ஆண்டு ஜிம்னாஸ்டிக் அயர்லாந்தின் சார்பாக நடத்தப்பட்ட ஜிம்னாஸ்டிக் போட்டியில் பலர் பங்கேற்றனர். அதில் பங்கேற்ற பங்கேற்பாளர்களை மேடைக்கு அழைத்து பங்கு பெற்றதற்கான பங்கேற்பு சான்றிதழை பெண் ஒருவர் வழங்கினார். அப்போது வரிசையில் நின்றுகொண்டிருந்த கறுப்பினப் பெண் ஒருவரை மட்டும் விட்டுவிட்டு மற்றவர்களுக்கு பங்கேற்பு பதக்கங்களை வழங்கியுள்ளார்.

கடந்த ஆண்டு இச்சம்பவம் அரங்கேறிய நிலையில் இந்தாண்டு செப்டம்பர் 22 அன்று மனித உரிமை ஆய்வாளரான மொஹமது சஃபா என்பவர் தனது x வலைதளப்பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டு இந்த நிகழ்வு என் இதயத்தை உடைத்துவிட்டது. இதனை நிராகரித்து சென்று விடாதீர்கள், இவருக்கு உங்களது ஆதரவை தாருங்கள் “என்று பதிவிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சீமோன் பைலீஸ் இதனை கண்டு “இதை பார்க்கும் போது என் இதயம் உடைந்துவிட்டது. நான் ஒரு சிறிய வீடியோவை இவருக்கு அனுப்பி இருக்கிறேன். எந்த விளையாட்டிலும் இனவெறிக்கு இடமில்லை” என்று தனது x வலைதளப்பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இது குறித்து ஜிம்னாஸ்டிக் அயர்லாந்து செப்டம்பர் 22 அன்று தனது பொது அறிக்கையில் இச்சம்பவத்திற்காக தனது ஆழ்ந்த மன்னிப்பை தெரிவித்தது.

இருப்பினும் இது குறித்து அச்சிறுமியின் தாய் கூறுகையில் , “இந்த பதில் மிகவும் தாமதமானது. இந்த கொடூரமான சம்பவத்திற்குப் பிறகு, அவர்கள் மன்னிப்பு என்பது தேவையில்லாத ஒன்று. (செப்டம்பர் 22 அறிக்கை) எனக்கு இது போதுமான பதில் இல்லை. இதனை ஒரு வருடத்திற்கும் மேலாக சர்வதேச அளவில் மில்லியன் கணக்கான மக்கள் பார்த்து வெறுத்துவிட்டனர். இதற்கு மன்னிப்பு கேட்பது என்பது பயனற்றது. எனக்கு தேவையானது என்னவென்றால் 'ஜிம்னாஸ்டிக்ஸுக்கு வரும் அடுத்த கறுப்பினக் குழந்தை பாதுகாப்பாக இருப்பார்கள் என்றும், இது போன்று இனி நடக்காது என்று அவர்கள் சொல்வதை நான் கேட்க விரும்புகிறேன். அப்படி எதுவும் இதில் கூறிப்பிடவில்லை?” என்று தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, திங்கள் கிழமை அன்று ஜிம்னாஸ்டிக்ஸ் அயர்லாந்து மீண்டும் ஒரு "பொது மன்னிப்பு அறிக்கையை" வெளியிட்டது. அதில் "இனி இது போன்ற எதுவும் நடக்காது.

இந்த ஆண்டில் எங்களது கொள்கை மற்றும் நடவடிக்கைகளை பதிப்பாய்வு செய்வதற்கென்று ஒரு தனி நிபுணரை நாங்கள் நியமித்திருக்கிறோம். இது போன்ற நிகழ்வு மீண்டும் நடைபெறாது என்பதை நாங்கள் உறுதி செய்கிறோம். ஜிம்னாஸ்டின் குடும்பம் மற்றும் ஸ்போர்ட் அகென்ஸ்ட் ரேசிசம் அயர்லாந்து (SARI) (gymnast’s family and Sport Against Racism Ireland) என்ற அமைப்புடன் நாங்கள் இணைந்து செயல்பட இருக்கிறோம். இதன் மூலம் இது சம்பந்தமாக எங்கள் நடைமுறைகளை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது குறித்து அவர்களிடம் ஆலோசனைகளை பெற விரும்புகிறோம்” என்று கூறி இருக்கின்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com