விலங்குகளின் விந்தை உலகம்: பயப்படாத பைசன்கள்.!

விலங்குகளின் விந்தை உலகம்: பயப்படாத பைசன்கள்.!

விலங்குகளின் விந்தை உலகம்: பயப்படாத பைசன்கள்.!
Published on

விலங்குகளில் யானை, காண்டாமிருகம், நீர்யானை போன்ற வலிமையான மிருகங்களில் நான்காவது இடத்தில் உள்ள ஒரு விலங்கு பைசன்.பைசன்  என்று ஆங்கிலத்தில் ஒற்றை வார்த்தையால் அழைக்கப்படும் இந்த விலங்கு, தமிழில் காட்டெருமை, காட்டு போத்து என்று அழைக்கப்படுகிறது. தமிழ் இலக்கியங்களில் ‘கடமா’ என்று இதை அழைத்திருப்பது சில வரிகளின் மூலம் அறியப்படுகிறது.

பொதுவாகவே இதைக் கிராமப் பகுதிகளில் காட்டுமாடு என்று குறிப்பிடுகிறார்கள். வெளிநாடுகளில் இதை கௌர் என்றும், இந்தியன் பைசன் என்றும் அடையாளப்படுத்துகிறார்கள். போவிடே என்னும் விலங்கியல் பிரிவைச் சேர்ந்த பைசன்கள் 50-க்கும் மேற்பட்ட வகைகளோடும், 115 க்கும் மேற்பட்ட இனங்களோடும் உலகம் முழுவதும் உள்ள காடுகளில் கூட்டம் கூட்டமாய் திரிந்துகொண்டு இருக்கின்றன.

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வடக்கு ஆசியாவின் அடர்த்தியான காடுகளில் வாழ்ந்து வந்த இந்த பைசன்கள், அங்கிருந்து ஐரோப்பா, வடக்கு அமெரிக்கா என்று தடம் பதித்துவிட்டு, நம் இந்திய எல்லையில் உள்ள காடுகளுக்குள் நுழைந்து, ஒரு நிலையான இடத்தைப் பிடித்துக்கொண்டன. இப்போது நம்முடைய கிராமப்புறங்களில் வளர்க்கப்படும் எருமைகள் எல்லாம் அந்த காட்டு எருமைகளின் மேம்பட்ட பிரதிகள்தான் என்றுவிலங்கியல் நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

முரட்டுத்தனமான பைசன்கள், பரிணாம வளர்ச்சியில் அதன் ‘ட்ரெயிட்’ கள் உடம்பினின்றும் விலகிக்கொள்ள, வீட்டில் வைத்து வளர்க்கும் அளவுக்கு, சற்றே வலிமை குறைந்த மனிதனின் கட்டளைகளுக்கு அடிபணியக் கூடிய எருமையினம் உருவாயிற்று. பழங்காலச் சான்றுகள் மொகஞ்சதாரோவின் புதை படிமங்களில் இந்த காட்டெருமைகளின் அடையாளங்கள் கிடைத்திருக்கின்றன. அந்த அகழ்வாராய்ச்சியில்
கிடைத்த சான்றுகளின்படி, இவை கிமு 3000 ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்து கொண்டிருந்த ஒரு விலங்கினம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த புதை படிமங்களில் ஒரு சிற்பம் ‘நோஸ் ரோப்’ எனப்படும் மூக்கணாங்கயிற்றோடு கூடிய எருமை இருப்பதால், அந்த காலத்தில் வாழ்ந்த மக்களின் ஒரு பயன்பாட்டு விலங்காக பைசன் இருந்துள்ளது என்கிற உண்மை ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு தொல்பொருள் துறையில் காணப்படும் சில குறிப்புகளில் 10,000 ஆண்டுகளுக்கு முன்பே, சரித்திர காலத்துக்கு முந்தைய சிவப்பிந்தியர்கள் பைசன்களை வேட்டையாடி சாகசம் செய்திருப்பதாகச் சொல்லப் பட்டிருக்கிறது.

1900-ஆம் ஆண்டு, பைசன்கள் புனர் ஜென்மம் எடுத்த ஆண்டு என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் 1860-ஆம் ஆண்டு அமெரிக்கக் காடுகளில் கூட்டம் கூட்டமாய் வாழ்ந்து கொண்டிருந்த பைசன்கள், அதன்  இறைச்சிக்காகக் குறிவைக்கப்பட்டன. அமெரிக்காவின் ரயில்வே தொழிலாளர்களின் தினசரி உணவுப் பட்டியலில் பைசன் இறைச்சி சேர்க்கப்பட்டதே அதற்குக் காரணம்.

இப்படி ஒரு பக்கம், உணவுக்காக பைசன்கள் வேட்டையாடப்பட, மறுபக்கம் ‘புல் ஃபைட்’ எனப்படும் விளையாட்டுக்காக, எண்ணற்ற பைசன்கள் ஈட்டியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டன. ஒரு கட்டத்தில் அமெரிக்க அரசாங்கத்தை, விலங்கியல் வல்லுநர்கள் எச்சரிக்கை செய்தார்கள். பைசன்களை இப்படியே வேட்டையாடிக் கொண்டுபோனால் எதிர்காலத்தில் மியூசியத்தில் மட்டுமே, அதை காட்சிப்பொருளாக பார்க்கவேண்டிய நிலைமை உருவாகும் என்று எடுத்துரைத்தார்கள்.

அமெரிக்க அரசும் நிலைமையை உணர்ந்து கொண்டு, உஷாராகி  கடுமையான சட்டங்களை இயற்றி, ‘எல்லோ ஸ்டோன்’ என்ற பெயரில், ஒரு பரந்த பரப்பளவைக் கொண்ட காட்டுப் பகுதியை உருவாக்கி, பைசன்களை பராமரிக்கத் துவங்கியது. அடுத்த சில ஆண்டுகளிலேயே பைசன்கள் ஆயிரக்கணக்கில் பெருகிவிட்டன. ஆனாலும் அமெரிக்காவில் புல் பைட்டுக்காக ஆண்டுதோறும் சில நூறு பைசன்களைக் கொல்லலாம் என்ற சட்டம் இயற்றப்பட்டு, அது நடைமுறையிலும் உள்ளது.

பைசன் உடல் வலிமைமிக்கவையாக இருந்தாலும் எந்த ஒரு மிருகத்தையும் தேவையில்லாமல் தாக்காது. அதிலும் மனிதர்களைப் பார்த்துவிட்டால் கண்டும் காணாததுபோல் ஒதுங்கிப் போய் விடும். ஒரு வளர்ந்த பைசனின் எடை 1200 கிலோ வரை இருக்கும். தலையிலிருந்து முழு உடம்பின் நீளம்  240 செ.மீ. முதல் 300 செ.மீ. வரை இருக்கும். வால் மட்டும் 60 செ.மீ. முதல் 100 செ.மீ. வரை இருக்கும்.

ஆண் பைசன், பெண் பைசன் ஆகிய இரண்டுக்குமே கொம்புகள் இருக்கும். நெற்றியை ஒட்டிய பகுதியில் இரு கொம்புகளுக்கும் இடையே மூன்றிலிருந்து நான்கு அங்குலம் அளவுக்கு கொம்புகள்  படர்ந்து தெரியும். பெரும்பாலும் பைசன்கள் சாம்பல் கலந்த கருப்புநிறத் தோலோடு காணப்படும். இதன் தலையோடு ஒப்பிடும்போது காதுகள் மிகச்சிறியவை. வாலில் ரோமம் அடர்த்தியாக  இருக்கும். இதன் கால்கள் வெள்ளை நிறத்தோடு காணப்படும். ஆண்பைசனின் முதுகில் உள்ள திமிலானது, பெண் பைசனின் திமிலை விடப் பெரியதாக இருக்கும்.

பைசன் அசைபோடும் பிராணி. இதன் வயிறு 4 அறைகளாக  பிரிக்கப்பட்டு, அதில் முதல் அறை ஒரு மெகா ஸ்டோர் மாதிரி இருக்கும். அவசர அவசரமாக உணவை இந்த அறையில் நிரப்பிக் கொண்டு,  உச்சி வெயிலுக்கு நிழலில் ஓய்வு எடுக்கும்போது, மீண்டும்அந்த உணவை வாய்க்கு கொண்டுவந்து, மென்று, ருசித்து மேற்கொண்டு அது  ஜீரணிக்கப்படுவதற்காக இரண்டாவது அறைக்கு அனுப்பிவைக்கும். இப்படியே படிப்படியாக நான்கு அறைகளில் இதன் உணவு அரைக்கப்படும்.

இவற்றின் உணவு என்பது காட்டில் வளரும் ஒரு வகை வனப் புற்கள் மற்றும் சதைப்பற்றான இலைகளோடு கூடிய குற்றுச் செடிகள் மட்டுமே. புல் வகைகள் கிடைக்காதபோது காட்டுக் கொடிகளை உணவாக எடுத்துக்கொள்ளும். மழைக் காலங்களிலும் குளிர் காலங்களிலும் பைசன்கள், தங்களுடைய  இருப்பிடத்தை காட்டின் பள்ளத்தாக்குப் பகுதிகளுக்கு மாற்றிக் கொள்கின்றன.

விவசாயிகள் பயிரிடும் விளைநிலங்களை இவை நாசப்படுத்துவது இல்லை என்பது ஒரு வியப்புக்குரிய விஷயம். ஒரு பைசனை தனிமையில் பார்ப்பது அரிதிலும் அரிது. இவைகூட்டமாய் வாழும் தன்மை கொண்டவை. கூட்டத்தின் தலைவியாகவோ, தலைவராகவோ வயது முதிர்ந்த பைசன் மட்டுமேஇருக்கும். பொதுவாக பெண் பைசனே தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும். ஒரு குழுவில் உள்ள ஆண் பைசன் அதே குழுவில் உள்ள பெண் பைசனோடுதான் இணை சேர வேண்டும்.


இன்னொரு குழுவில் உள்ள பெண் பைசனை விரும்பி இணை சேர முயன்றால், அந்தக் குழுவில் உள்ள ஆண்பைசன்கள் அதை விரட்டி அடித்து விடும். இதற்காக பெரிய அளவில் சண்டை நடப்பதும் உண்டு. ஒரு பெண் பைசனின் கர்ப்பக்காலம் என்பது 10 முதல் 11 மாதங்கள் வரை இருக்கும். பெரும்பாலும் ஒரு கன்று மட்டுமே ஈனும். வெகு அரிதாக இரட்டைக் கன்றுகள் பிறப்பதும் உண்டு.


ஒரு ஆண் கன்றானது ஒன்றரை வருட காலத்திற்குள் பாலியல் முதிர்ச்சியைத் தொடங்கிவிடுகிறது. ஆனால் ஒரு பெண் கன்று  பருவத்திற்கு வர மூன்று ஆண்டு காலம் பிடிக்கிறது. பைசனின் ஆயுள் காலம் 25 ஆண்டுகள் முதல் முப்பது ஆண்டுகள் வரை மட்டுமே. இவை மேய்ச்சல் மிருகமாய் இருப்பதால், பரந்த வெளிகளில் புல் மேயும்போது, முதலைகளுக்கும், சிங்கம், புலி போன்ற மூர்க்கமான  மிருகங்களுக்கும் வெகு சுலபத்தில் இரையாகிவிடுகின்றன.

பைசன்கள் கூட்டமாக இருக்கும்போது எதிரியைக் கண்டுவிட்டால், சிதறி ஓட முற்படாமல் ஒருங்கிணைந்து அந்த எதிரியைத் தாக்க வரும். எனவே இதனுடைய எதிரிகள் கூட்டமாக இருக்கும். பைசன்களைப் பார்த்தால் நைசாக நழுவிப் போய்விடும். ஆனால் புலிகள் மட்டும் பைசன்களை புத்திசாலித்தனமாய்  வேட்டையாடும். பைசன் கூட்டத்தைப் பார்த்துவிட்டால் புதர்களுக்கு இடையே போய், தான் இருக்கும் இடம் தெரியாத அளவுக்கு பதுங்கிக்கொள்ளும்.

பைசன்கள் மேயும்போது, அதில் ஏதாவது ஒன்று கூட்டத்தில் இருந்து சற்றே விலகி, புல் மேய்ந்து கொண்டிருக்கும் போது, புலி அந்த குறிப்பிட்ட பைசனைக் குறி வைத்துப் பாய்ந்து, அதனுடைய தண்டுவடத்தைக் கடித்துக் குதறி விட்டு ஓடிவிடும். தண்டுவடம் பாதிக்கப்பட்ட பைசன் நடக்க முடியாமல் நடந்து, பின்மயக்கமடைந்து சாய்ந்துவிடும். மற்ற பைசன்கள் அதைக் காப்பாற்றும் முயற்சியாக,  புரட்டிப் புரட்டிப் பார்க்கும். இனிமேல் காப்பாற்றமுடியாது என்று  தெரிந்த பின், உயிரை விட்டுக்கொண்டு இருக்கும் பைசனை, அதே இடத்தில் விட்டு விட்டுப் போய்விடும். எல்லா பைசன்களும் சென்ற பிறகு புலி தன்னுடைய மறைவிடத்திலிருந்து வெளிப்பட்டு, உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும்பைசனை முழுவதுமாய்க் கொன்று, அதை உண்ண ஆரம்பிக்கும்.

பைசனுக்கு அண்ணன் வைசன்

நம்முடைய நாட்டில் இருக்கும் பைசனுக்கு, ஐரோப்பாவில் அண்ணன்  ஒருவன் இருக்கிறான். அவனுக்கு பெயர் வைசன்  இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ‘பயாலோ வெய்ஸா’ காட்டில் இந்த வைசன் எனப்படும் பைசன்கள் மிகுந்த அளவில் காணப்பட்டன. 2 மீட்டர் உயரமும், 1000 கிலோவுக்கும் மேற்பட்ட எடை கொண்டதாக இருக்கும்.

இதனுடைய குட்டிகள் பிறக்கும்போது குறைந்த அளவு எடை கொண்டதாக, அதாவது 15 கிலோ முதல் 36 கிலோ வரை மட்டுமே இருக்கும். இந்த வைசன்களின் வாழிடமானது வட ஐரோப்பாவின் தாழ் நிலங்களான மத்திய மாஸிஃபிலிருந்து வோல்கா ஆறு மற்றும் காகஸ் வரை பரவியுள்ளது. இந்த வைசன், பைசன்கள் போலவே அமெரிக்கன் பைசன் லட்டிஃப்ரான்ஸ் பைசன் ஆன்டிக்விஸ் பைசன் , ஆக்ஸிடென்டெய்ல்ஸ் பைசன், ஸ்டிப்பி பைசன் என்று பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். வனத்தில் வலிமை மிக்க நான்காவது மிருகமாக இருக்கும் பைசன்கள் வனத்தின் வளர்ச்சிக்கும், வனஉயிர்களின் சமநிலைக்கும் முக்கிய பங்காற்றுகின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com