ஆதார் தகவல்கள் பாதுகாப்பானது தான் - சர்பிடிகேட் கொடுக்கிறார் பில் கேட்ஸ்
ஆதார் தகவல்களில் எவ்வித தனியுரிமை சிக்கலும் இல்லை என்று பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வசிக்கும் அனைவருக்கும் ஆதார் அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மத்திய அரசின் அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் நலதிட்டங்களுக்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டது தொடர்பான பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.இதனிடையே, ஆதார் தகவல்கள் எளிதில் கசிவதாக அவ்வவ்போது செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், இந்த ஆதார் உலகிலேயே மிகவும் பாதுகாப்பான அடையாள அட்டை என மத்திய அரசு தெரிவித்து வருகின்றது.
இந்நிலையில், ஆதார் தகவல்களில் எவ்வித தனியுரிமை சிக்கலும் இல்லை என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஆதார் தொழில்பட்பத்தால் அதிக அளவில் பயன்பாடு உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், “இந்தியாவைப் போன்று மற்ற நாடுகளும் ஆதார் பயன்பாட்டை பின்பற்ற வேண்டும். மற்ற நாடுகளிலும் ஆதார் பயன்பாட்டை கொண்டு வருவதற்காக உலக வங்கிக்கு நிதி அளித்துள்ளோம். ஆதாரில் எவ்வித தனிப்பட்ட உரிமை சிக்கலும் இல்லை. இது வெறும் பயோமெட்ரிக் தான்” என்று பில்கேட்ஸ் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், இந்திய தனிநபர் அடையாள ஆணையத்தின் முன்னாள் தலைவரும், இன்போசிஸ் நிறுவத்தின் இணை நிறுவனருமான நந்தன் நீலகேனி உடன் இருந்தார்.