மனித உரிமை மீறல்களுக்கு சீனா விலை கொடுக்க நேரிடும் : ஜோ பைடன் எச்சரிக்கை
சீனா தனது மனித உரிமை மீறல்களுக்கு விலை கொடுக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். இஸ்லாம் சிறுபான்மையினரை சீனாவின் மேற்கு பிராந்தியமான ஜின்ஜியாங்கில் கையாளுவது குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசும்போது அவர் இவ்வாறு கூறினார்.
சிறுபான்மை மக்களை தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்திருப்பதாகவும், அவர்கள் மீது மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகவும் சீன அதிபர் ஜி ஜின்பிங் மீது உலகளாவிய விமர்சனங்கள் எழுந்துவருகிறது. ஒரு நிகழ்வில் பேசிய பைடன் "சீனா ஒரு உலகத் தலைவராகவும், பணக்கார நாடாக வேண்டும் என்றும், மற்ற நாடுகளின் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்பதற்காகவும் மிகவும் முயற்சி செய்கிறது. ஆனால், அவர்கள் அடிப்படை மனித உரிமைகளுக்கு முரணான செயலில் ஈடுபடும் வரை, அவை அவர்களுக்கு கடினமாக இருக்கும்" என்று அவர் கூறினார்.
மேலும் பெய்ஜிங்கின் "வலுக்கட்டாய மற்றும் நியாயமற்ற" வர்த்தக நடைமுறைகள் மற்றும் உரிமை பிரச்னைகள், அதன் ஹாங்காங் ஒடுக்குமுறை, சின்ஜியாங் தடுப்புக்காவல்கள் மற்றும் தைவான் உட்பட சீன நடவடிக்கைகள் ஆகியவற்றின் மீது கடுமையான அணுகுமுறையை அமெரிக்கா கையாள்வது குறிப்பிடத்தக்கது.