கொரோனாவை கட்டுப்படுத்த புதிய முயற்சியை கையிலெடுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

கொரோனாவை கட்டுப்படுத்த புதிய முயற்சியை கையிலெடுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
கொரோனாவை கட்டுப்படுத்த புதிய முயற்சியை கையிலெடுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

அமெரிக்காவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், அதிபர் ஜோ பைடன் புதிய ஐடியாவொன்றை செய்துள்ளார். அதன்படி அமெரிக்க மக்கள் தங்களுக்கு அருகிலுள்ள மருந்தகங்களிலேயே கொரோனா பரிசோதனையை எளிமையாக செய்துகொள்ள தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளார் ஜோ பைடன். ஒருவேளை அந்தப் பரிசோதனையில் அந்நபருக்கு கொரோனா உறுதியானால், அவர்களுக்கு இலவசமாக கொரோனாவுக்கான ஆன்டி-வைரல் மருந்துகள் அளிப்பதற்கான ஏற்பாடுகளையும் அதிபர் ஜோ பைடன் செய்திருக்கிறார்.

`டெஸ்ட் டு ட்ரீட்’ (Test to Treat- குணப்படுத்துவதற்காக பரிசோதித்துக்கொள்ளுங்கள்) என்ற பெயரில் இந்த புதிய முயற்சியை தொடங்கியுள்ளார் பைடன். இன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அதிபர் பைடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதிபர் பைடனின் இந்த புதிய அறிவிப்பு, பிற நாடுகளில் இல்லாத அளவுக்கு கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை பெருவாரியாக அதிகரிக்க வைத்துள்ளது.

பைடனின் இந்த முயற்சிக்கு `பைசர்’ நிறுவனத்தின் சார்பில் மட்டும் அமெரிக்காவுக்கு 1 மில்லியன் மாத்திரைகள் மார்ச் மாதத்தில் தரப்பட உள்ளது. அதுவே ஏப்ரலில், இன்னும் கூடுதலாக 1 மில்லியன் மாத்திரைகளை தரவுள்ளது. பைசர் மாத்திரைகள், மருத்துவமனையில் ஒருவர் அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்பை 90% குறைக்கும் என்ற நிலையை உருவாக்கியுள்ளது என்பதால் அமெரிக்காவின் இந்த முயற்சியில் பைசர் மிகமுக்கிய பங்காற்றுமென தெரிகிறது.

“பாதுகாப்பான, இயல்பான வாழ்க்கைக்கு நாம் அனைவரும் திரும்புவதற்காக இந்த அறிவிப்புகள், முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது” என்ற நோக்கத்தின்கீழ் இந்த முடிவுகள் தெரிவிக்கப்பட்டிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஏற்கெனவே கொரோனாவிலிருந்து இயல்புக்கு திரும்ப சில தளர்வுகளை வெள்ளை மாளிகை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி கொரோனாவுக்கான இரு டோஸ் தடுப்பூசியும் போட்டவர்களுக்கு, மாஸ்க் கட்டாயமென்பதிலிருந்து விலக்கு அளிப்பது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகின. இதைத்தொடர்ந்து ஃபெடரல் ஏஜென்சிகளும், தங்களின் அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்கள், `அரசு அலுவலகங்களில் இருக்கும்போது மாஸ்க் அணிவது கட்டாயமில்லை’ உள்ளிட்ட தளர்வுகளை ஏற்படுத்தியிருந்தது.

தனது இந்த முயற்சி குறித்து அதிபர் பைடன், “இப்படியான நடவடிக்கைகள் மூலம், இனி புதிய கொரோனா திரிபு உருவாகாது என்று நாங்கள் உறுதியளிக்கவில்லை. ஆனால் அதேநேரம் அப்படி உருவாகும் கொரோனா திரிபை நம்மால் எளிதில் கட்டுப்படுத்த முடியும் என்றே கூறுகிறோம்” என்றுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com