ரஷ்யாவுக்கு பதிலடி தர உக்ரைனுக்கு உதவி: அமெரிக்கா அறிவிப்பு
ரஷ்யாவுக்கு தக்க பதிலடி தர, உக்ரைனுக்கு இந்திய மதிப்பில் 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ தளவாடங்கள் வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
பிரிட்டனை தொடர்ந்து, அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசிய உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, ரஷ்யாவுக்கு எதிரான போரில், தங்களுக்கு கூடுதலான உதவிகளை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார். இதைத் தொடர்ந்து ரஷ்யாவுக்கு தக்க பதிலடி தர 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ தளவாடங்கள் வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், போர் விமானங்களை சுட்டு வீழ்த்தும் 800 அமைப்புகள், ஹெலிகாப்டர்கள், ராணுவ டாங்கிகள், எதிரிகளின் ராணுவ நிலைகளை அழிக்கும் திறன் படைத்த 9 ஆயிரம் ஆன்டி ஆர்மர் தொகுப்புகள், துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் போன்ற 7 ஆயிரம் சிறு ஆயுதங்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.