கஷோகி படுகொலை விவகாரம்: சவுதி அரேபியாவுக்கு எதிராக பைடன் அடுத்தடுத்து அதிரடி!

கஷோகி படுகொலை விவகாரம்: சவுதி அரேபியாவுக்கு எதிராக பைடன் அடுத்தடுத்து அதிரடி!
கஷோகி படுகொலை விவகாரம்: சவுதி அரேபியாவுக்கு எதிராக பைடன் அடுத்தடுத்து அதிரடி!

2018 ஆம் ஆண்டு பத்திரிகையாளர் ஜமால் கஷோகி படுகொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக, சவுதி அரேபிய குடிமக்களை குறிவைத்து பொருளாதாரத் தடைகள் மற்றும் விசா தடைகளை அறிவித்துள்ளார், அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

வெளிநாடுகளில் உள்ள அதிருப்தியாளர்களை அச்சுறுத்துவதாக கூறி, சவுதி அரேபியாவை சேர்ந்த 76 தனிநபர்களுக்கு எதிராக அமெரிக்கா விசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தான் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார் பைடன். அதன்படி, சவுதி அரேபியாவுடனான உறவுகளை மறுசீரமைக்க முடிவு செய்துள்ளார். முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் அரபு நாடுகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், மனித உரிமை மீறல்களுக்கு துணைப் போனதாக எழுந்த குற்றச்சாட்டின் எதிரொலியாக பைடன் இந்த முடிவை எடுத்துள்ளார்.

இது தொடர்பாக பைடன் நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் அதிகாரி ஒருவர் கூறுகையில், ``மத்திய கிழக்கு நாடுகளுடனான அணுகுமுறையில், உறவை முறித்துக்கொள்ளாமல், ராஜாங்க ரீதியிலான உறவில் புதிய துவக்கப் புள்ளியை உருவாக்குவதை பைடன் நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறார்” என்றார்.

மேலும், அமெரிக்காவில் இருந்த பத்திரிகையாளர் கஷோகி கொடூரமான முறையில் கொல்லப்பட்டது சவுதியுடனான பல ஆண்டுகால உறவை பாதித்துள்ளது என்று அவர் கூறுகிறார்.

கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி இஸ்தான்புல்லில் உள்ள சவுதி துணைத் தூதரகத்திற்கு அழைத்து, அவரை சுட்டுகொன்றது சவுதி. இதற்கு காரணம், அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் என்று அமெரிக்க உளவுத்துறையின் அறிக்கையின் அடிப்படையில் சவுதி மீது பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தது அமெரிக்கா.

இதன் எதிரொலியாக, முன்னாள் சவுதி உளவுத்துறைத் தலைவர் அஹ்மத் அல்-ஆசிரி மீது பொருளாதாரத் தடையை விதித்துள்ளது அமெரிக்கா. அதுமட்டுமல்லாமல் சவுதி காவல்படையான ஆர்ஐஎஃப் மீதும் பொருளாதாரத் தடைகள் விதிக்கபட்டுள்ளது. அதேபோல சவுதியில் வாழும் தனிநபர் அமெரிக்காவில் வைத்துள்ள சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

"ஜமால் கஷோகியின் கொடூரக் கொலையில் தொடர்புடையவர்கள் பொறுப்பேற்க வேண்டும்" என்று அமெரிக்க கருவூல செயலாளர் ஜேனட் யெல்லன் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் உள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் அதிருப்தியாளர்களை அச்சுறுத்துவதாக கூறி, 76 சவுதி குடிமக்களுக்கு எதிரான விசா கட்டுப்பாடுகளையும் அமெரிக்கா அறிவித்துள்ளது. விசா தடை குறிப்பிட்ட சில குடும்ப உறுப்பினர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

``எங்கள் நாட்டு எல்லைக்குள் இருக்கும் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்ற அடிப்படையில் வெளிநாட்டு அரசுகளின் சார்பில் அதிருப்தியாளர்களாக கருதப்பட்டு, குறிவைக்கப்படும் குற்றவாளிகளை அமெரிக்காவுக்குள் அனுமதிக்க முடியாது” என்று வெளியுறவுத்துறை செயலாளர் அந்தோணி பிளிங்கன் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதிருப்தியாளர்களையும் பத்திரிகையாளர்களையும் குறிவைத்து துன்புறுத்தும் சவுதி அரேபியா மற்றும் பிற நாடுகளின் திட்டத்தை தனது வருடாந்திர மனித உரிமை அறிக்கையில் ஆவணப்படுத்தப் போவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

யு.எஸ். பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் ஏற்கெனவே சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சவுதி இளவரசருக்கு எதிராக பொருளாதாரத் தடையை ஏன் விதிக்கவில்லை என்பது குறித்து கேட்டதற்கு, அமெரிக்கா பொதுவாக "நாடுகளின் மிக உயர்ந்த தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதில்லை” என ஆஸ்டின் பதிலளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com