'ஹிரோஷிமாவை நினைவுப்படுத்துகிறது' - பேட்டி கொடுக்கும் பொழுது அழுத பெய்ரூட் ஆளுநர்
பெய்ரூட்டின் துறைமுகத்தில் நேற்று சக்தி வாய்ந்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த நகரமும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. கட்டடங்கள் பயங்கரமாக சேதம் அடைந்துள்ளன. நகரம் முழுவதும் பல்வேறு கட்டடங்களின் ஜன்னல்கள் உடைந்து விழுந்தன. பெய்ரூட் முழுவதும் மிகப்பெரிய நில அதிர்வை உணர்ந்து உள்ளது.
இந்நிலையில், இந்த சக்தி வாய்ந்த வெடிவிபத்தில் 73 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 3,700 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வெடிவிபத்துக்கு குடோனில் வைக்கப்பட்ட 2700 டன் அம்மோனியம் நைட்ரேட் தான் காரணம் என லெபனான் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த நிகழ்வை ஹிரோஷிமா, நாகசாகியுடன் ஒப்பிட்டு பேசிய பெய்ரூட்டின் ஆளுநர் பேசிக்கொண்டு இருக்கும் போதே கண்ணீர்விட்டு அழுத காட்சி காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது. செய்தி தொலைக்காட்சிக்கு பேசிய ஆளுநர், இந்த சம்பவம் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகியைத் தான் நினைவுப்படுத்துகிறது.
என்னுடைய வாழ்க்கையில் இப்படி ஒரு அழிவை நான் பார்த்து இல்லை எனத் தெரிவித்தார். அப்போது தன்னுடைய அழுகையை கட்டுப்படுத்த முடியாத ஆளுநர் கண் கலங்கி அழுதார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பெய்ரூட் விரைவில் மீண்டு வரும் என பலரும் ஆறுதலாக கருத்து தெரிவித்துள்ளனர்.