6 மாதங்களுக்கு பிறகு சர்வதேச விமானப் போக்குவரத்தை தொடங்குகிறது சீனா தலைநகர் பெய்ஜிங்
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மார்ச் 23 ம் தேதி தடைவிதித்த பின்னர், சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து நேரடி சர்வதேச விமான போக்குவரத்து இன்று முதல் மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியாவில் தாய்லாந்து, கம்போடியா மற்றும் பாகிஸ்தானை இணைக்கும் விமானங்கள்; ஐரோப்பாவில் கிரீஸ், டென்மார்க், ஆஸ்திரியா மற்றும் சுவீடன் மற்றும் வட அமெரிக்காவில் கனடா போன்ற கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள நாடுகளில் விமானப்போக்குவரத்து முதல்கட்டமாக மீண்டும் தொடங்கும் என்று சீனாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. பெய்ஜிங்கிற்கான முதல் நேரடி சர்வதேச விமானம் வியாழக்கிழமை கம்போடியாவின் தலைநகர் புனோம் பென்னிலிருந்து புறப்படும். இது ஏர் சீனாவால் இயக்கப்படும். சீனா படிப்படியாக அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து ஷாங்காய் மற்றும் பிற நகரங்களுக்கு விமானங்களை அனுமதித்து வருகிறது.
சீனாவின் பிற நகரங்களைப் போலவே பெய்ஜிங்கிற்குள் நுழையும் அனைத்து சர்வதேச பயணிகளும் மருத்துவசோதனைகளுக்காக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பிறகு நியூக்ளிக் அமில சோதனைகளை இரண்டு முறை மேற்கொள்வார்கள் என்று பெய்ஜிங் சுகாதார ஆணைய செய்தித் தொடர்பாளர் காவ் சியாஜுன் தெரிவித்தார். உள்ளூர் சுகாதார அதிகாரிகளின் தகவல்களின்படி, பெய்ஜிங்கில் தொடர்ந்து 26 நாட்களாக புதிய கொரோனா தொற்று எதுவும் இல்லை.