அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துமஸ் தாத்தா போல் வேடமணிந்து குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்களை வழங்கினார்.
அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான கொண்டாட்டம் களைகட்டத் தொடங்கி இருக்கிறது. இந்நிலையில் குழந்தைகளை மகிழ்விக்கும் நோக்கில், முன்னாள் அதிபர் ஒபாமா கிறிஸ்துமஸ் தாத்தா போல வேடமணிந்தார். அத்துடன் தேசிய குழந்தைகள் மருத்துவமனைக்கு சென்ற அவர் அங்குள்ள குழந்தைகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார். ஒபாமைவை சற்றும் எதிர்பாராத குழந்தைகள் அவரைக்கண்டதும் உற்சாக மிகுதியில் துள்ளிக் குதித்தனர். குழந்தைகளுடன் உற்சாகமாக பேசி விளையாடிய ஒபாமா, அவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். பல குழந்தைகள் அவரைக்கண்டு ஆனந்தக்கண்ணீர் வடித்தனர். அதன்பின் குழந்தைகளுடன் ஒபாமா நடனமாடி அவர்களை மகிழ்வித்தார்.
குழந்தைகள் மட்டுமின்று அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவரையும் சந்தித்து தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார். ஒபாமாவின் வருகையை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த தேசிய குழந்தைகள் மருத்துவமனை உங்களது வருகைக்கு நன்றி. உங்கள் வருகையால் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி உண்டானது என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டிருந்தனர். அதனை ரீட்வீட் செய்த ஒபாமா, அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். என்னை கிறிஸ்துமஸ் தாத்தாவாக ஏற்றுக்கொண்டதுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.
ஒபாமாவின் இந்தச் செயல்பாட்டை அமெரிக்க மக்கள் மட்டுமின்றி உலக நாடுகளின் உள்ள பலரும் பாராட்டி வருகின்றனர். ஒபாமா அடிக்கடி இப்படி சர்ப்ரைஸ் சேட்டைகளை செய்வார். அதை மறுபடியும் தொடங்கிவிட்டார் என்று நகைச்சுவையாக தெரிவித்துள்ளனர்.