இனி இந்தியா இல்லை.. எல்லாமே சீனாதான்.. கைகோத்த வங்கதேசம்!
வங்கதேசம் தனது இரண்டாவது மிகப்பெரிய கடல் துறைமுகமான மோங்லா துறைமுகத்தை விரிவுபடுத்தும் நோக்கில், சீனாவுடன் 335.78 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சலுகைக் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், வங்கதேசத்தின் துறைமுகத் திறனை அதிகரிப்பதோடு, இந்தியாவிற்கு கவலைகளையும் எழுப்பியுள்ளது.
அண்டை நாடான வங்கதேசத்தின் இரண்டாவது மிகப்பெரிய கடல் துறைமுகமாக விளங்குவது, மோங்லா. இத்துறைமுகம், பசூர் ஆற்றின் கிழக்குக் கரையில், வங்காள விரிகுடாவிலிருந்து 71 கடல் மைல் தொலைவிலும் இந்திய எல்லையிலிருந்து சுமார் 80 கி.மீ. தொலைவிலும் மேற்கே அமைந்துள்ளது. இந்த நிலையில், சிட்டகாங் துறைமுகத்திற்கு அடுத்தபடியாக இருக்கும் மோங்லா துறைமுகத்தின் திறனை அதிகரிப்பது குறித்து வங்கதேசம் ஆலோசித்து வந்தது. இதையடுத்து, அந்தத் துறைமுகத்தை நவீனமயமாக்கவும் விரிவுபடுத்தவும் சீனாவுடன் ஒப்பந்தம் ஒன்றை வங்கதேசம் மேற்கொண்டுள்ளது. இதன்மூலம், சீன எக்சிம் வங்கியிடம் இருந்து 335.78 மில்லியன் அமெரிக்க டாலர் சலுகைக் கடனாக வழங்கப்பட இருக்கிறது. மேலும் இக்கடனுக்கு 2% ஆண்டு வட்டி விதிக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகள் சலுகைக் காலம் உட்பட 20 ஆண்டுகளில் இக்கடன் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
துறைமுகத்தில் 2 புதிய நவீன கன்டெய்னர் முனையங்கள் அமைப்பது இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
முன்னதாக, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம், இந்தப் பணியை இந்தியாவுக்கு வழங்கியிருந்தது. அதாவது, இந்தியா தனது வடகிழக்கு மாநிலங்களுக்கு (திரிபுரா, அசாம் போன்றவை) பொருட்களை விரைவாகக் கொண்டு செல்ல மோங்லா துறைமுகத்தைப் பயன்படுத்தப் போக்குவரத்து ஒப்பந்தங்களை மேற்கொண்டிருந்தது. ஆனால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்தியா அப்பணிகளைத் தொடங்கத் தவறிவிட்டது என்று கூறி அது ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, தற்போது சீனாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வங்கதேசப் பிரதமர் தாரிக் ரஹ்மான் சீனாவுக்கு மேற்கொண்ட பயணத்தின் விளைவாக இந்தப் புரிந்துணர்வு கடன் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், வங்கதேசத்தின் மோங்க்லா பணிகள் வேகம்பிடித்துள்ள நிலையில், அந்நாட்டில் விரிவடைந்து வரும் சீனாவின் ஆதிக்கம் இந்தியாவுக்கு கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது வணிக ரீதியிலான துறைமுகமாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், எதிர்காலத்தில் சீனப் போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் உளவுப் படகுகள் இங்கு வந்து தங்கவோ அல்லது ஆய்வு நடத்தவோ பயன்படுத்தப்படலாம் என்ற கவலை இந்தியாவிற்கு உள்ளது. மேலும், இந்தியாவின் கிழக்குக் கடற்கரை மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு மிக அருகில் சீனா காலூன்றுவது இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளில் (இலங்கையின் அம்பாந்தோட்டை, பாகிஸ்தானின் கவாடர், மியான்மரின் கியவுக்பியூ) துறைமுகங்களை மேம்படுத்தும் சீனா, மோங்லா துறைமுகத்தின் மூலமாக தனது 'முத்து மாலை' (String of Pearls) வியூகத்தை மேலும் வலுப்படுத்துகிறது.

