இடைக்கால யூனுஸ் அரசின் சதித் திட்டங்கள்.. அம்பலப்படுத்திய வங்கதேச அதிபர்!
அரசியலமைப்புக்கு முரணான முறையில் தன்னைப் பதவியில் இருந்து நீக்க சதி செய்ததாக வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதீன், முன்னாள் தலைமை ஆலோசகரும் நோபல் பரிசு பெற்றவருமான முகமது யூனுஸ் மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.
அண்டை நாடான வங்கதேசத்தில், கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் பின்.என்.பி. கூட்டணி அமோக வெற்றிபெற்று அரியணையைப் பிடித்தது. அக்கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் புதிய பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். இந்த நிலையில், வங்கதேச அதிபராக இருக்கும் முகமது ஷஹாபுதீன், இதற்கு முந்தைய இடைக்கால அரசின் தலைவராக இருந்த நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர், “அந்த ஒன்றரை ஆண்டுகளில், நான் எந்த விவாதத்திலும் ஈடுபடவில்லை. இன்னும் எனக்கு எதிராக பல்வேறு சதித்திட்டங்கள் தீட்டப்படுகின்றன. நாட்டின் அமைதியையும் ஒழுங்கையும் நிரந்தரமாக அழித்து அரசியலமைப்பு வெற்றிடத்தை உருவாக்க பல முயற்சிகள் நடந்துள்ளன. இடைக்கால அரசாங்க காலத்தில் முன்னாள் தலைமை ஆலோசகர் யூனுஸ் அரசியலமைப்பு ரீதியாக தன்னுடன் தொடர்பு கொள்ளவில்லை. வெளிநாட்டு வருகைகள் குறித்து தனக்குத் தெரிவிக்கப்படவில்லை. மாநில விஷயங்கள் குறித்தும் விளக்கப்படவில்லை. தலைமை ஆலோசகர் அரசியலமைப்பின் எந்த விதியையும் பின்பற்றவில்லை. அவர் 14 -15 முறை வெளிநாடு பயணம் செய்துள்ளார். ஆனால் ஒருமுறைகூட எனக்குத் தெரிவிக்கவில்லை. அவர் என்னைப் பார்க்க வரவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர், “அது மட்டுமல்ல, யூனுஸ் தான் வெளிநாடு செல்வதையும் தடுத்தார். அவர் [யூனுஸ்] எனது வெளிநாட்டுப் பயணங்களை இரண்டு முறை தடுத்தார். வெளியுறவு அமைச்சகம், தாம் பிஸியாக இருப்பதாகக் கூறி பங்கேற்க மறுப்பு கடிதத்தை எழுதியது. அடுத்து, தேர்தலுக்கு முன்னதாக அமெரிக்காவுடன் செய்துகொண்ட வர்த்தக ஒப்பந்தம் குறித்தும் தனக்கு எதுவும் தெரிவிக்கவில்லை. இது ஒரு அரசியலமைப்பு கடமை. ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. அக்டோபர் 22, 2024 அன்று ஒரு கும்பல், அதிபர் இல்லமான பங்கபபனைச் சுற்றி வளைத்து. அந்த இல்லத்தைச் சூறையாட முயற்சிகள் நடந்தன. அவை இறுதியில் இராணுவப் படையெடுப்பால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. அது, ஒரு பயங்கரமான இரவு.
இதற்கெல்லாம் காரணம், அந்த அரசாங்கம் என் பெயர் எங்கும் வருவதை விரும்பவில்லை. அவர்கள் என்னை முழுமையாக இருட்டில் வைத்திருக்க முயன்றனர். அரசியலமைப்பை மீறி யூனுஸ் வங்காளதேசத்தை நிர்வகித்ததால்தான் இவ்வளவு இறுக்கத்தை உணர்ந்தேன். பொதுத் தேர்தலுக்குப் பிறகு தனது பதவியை ராஜினாமா செய்ய இருந்தேன். ஆனால், வங்காளதேச தேசியவாதக் கட்சித் தலைமை தமக்கு ஆதரவை வழங்கியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். ஷஹாபுதீனின் பதவிக்காலம் ஏப்ரல் 2028 வரை நீடிக்கும். அதேநேரத்தில், பிரதமர் தாரிக் ரஹ்மான் மற்றும் அவரது அமைச்சரவையின் ஆதரவு அவருக்கு இருந்தால் அவர் அதிபராக நீடிப்பார்.

