ஷேக் ஹசீனாவைத் திருப்பி அனுப்ப கோரிக்கை.. வங்கதேச அரசு இந்தியாவுக்குக் கடிதம்!
வங்கதேசத்தில் நடைபெற்ற வன்முறை
அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. குறிப்பாக, பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்தியது அரசையே கலங்கடித்தது. இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து வங்கதேசத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவத்தின் கண்காணிப்பில் அங்கு இடைக்கால அரசு அமைந்துள்ளது. வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் பொறுப்பேற்றார்.
ஷேக் ஹசீனா மீது பதியப்பட்ட வழக்குகள்
இந்த நிலையில் வங்கதேசத்தைவிட்டு ஷேக் ஹசீனா வெளியேறி 4 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், அந்நாட்டில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக அவர்மீது மட்டும் 150க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மேலும், அவாமி லீக் அரசாங்கத்திற்கு எதிராக இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் எனக் கூறி டாக்காவை தளமாகக் கொண்ட சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் (ICT) 30க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, வழக்குகள் தொடர்பாக ஷேக் ஹசீனா நீதிமன்றத்தால் நாடினால், அவரை நாடு கடத்துவோம் என்று பங்களாதேஷ் இடைக்கால அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வலுக்கட்டாயமாக காணாமல் போனவர்கள் பட்டியல்
மேலும், ஷேக் ஹசீனா ஆட்சியில் ஏராளமானோர் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டதாக தகவல் வௌியாகி உள்ளது. யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, வலுக்கட்டாயமாக காணாமல் போனவர்கள் பற்றி விசாரணை நடத்த உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மைனுல் இஸ்லாம் சவுத்ரி தலைமையில் ஐந்து பேர் அடங்கிய குழுவை அமைத்தது. இதையடுத்து அக்குழு கடந்த வாரம் அறிக்கையை சமர்ப்பித்தது.
அதில், “ஷேக் ஹசீனா ஆட்சியில் 3,500க்கும் மேற்பட்டோர் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக 1,676 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை 758 புகார்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அதில் 200 பேர் அல்லது 27 சதவீதம் பேர் திரும்பி வரவில்லை. திரும்பி வந்தவர்களில் பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டவர்களின் பட்டியலில் உள்ளனர்.
வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படும் சம்பவங்களின் பின்னணியில் ஷேக் ஹசீனா உள்ளார். ஷேக் ஹசீனாவின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த மேஜர் ஜெனரல் தாரிக் அகமது சித்திக், தேசிய தொலைத்தொடர்பு கண்காணிப்பு மைய முன்னாள் இயக்குநர் ஜியாவுல் அஹ்சனந்த் மற்றும் பிற காவல்துறை மூத்த அதிகாரிகள் இந்த சம்பவங்களில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிடம் வங்கதேச அரசு கோரிக்கை
இதனால் ஷேக் ஹசினா மீது ஏகப்பட்ட வழக்குகள் உள்ளதை அடுத்து, அவரை விசாரிக்க வேண்டும் என வங்கதேச இடைக்கால அரசு கூறி வருவதுடன், அவருக்கு எதிராக நீதிமன்றங்களில் கைது வாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்தியாவிற்குத் தப்பிச் சென்ற ஷேக் ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி வங்கதேசத்தின் இடைக்கால அரசு பலமுறை கோரிக்கை வைத்து வருகிறது. எனினும், ஷேக் ஹசீனாவை வங்கதேசத்திடம் திருப்பி ஒப்படைக்கும் முடிவு தொடர்பாக இந்தியா இதுவரை எந்தப் பதிலும் தெரிவிக்காமல் உள்ளது.
இந்த நிலையில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்ப, அந்நாட்டு அரசு இந்தியாவுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக வங்கதேச அரசு, இந்தியாவுக்கு வாய்மொழியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் கோரிக்கை விடுத்துள்ளது. ஆம், இதுதொடர்பாக ஷேக் ஹசீனாவை நாடு கடத்துவதற்கான தூதரகக் குறிப்பை வங்கதேச அரசு டெல்லிக்கு அனுப்பியுள்ளது. இதுகுறித்து வங்கதேச வெளியுறவு ஆலோசகர் தௌஹித் ஹொசைன், "பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்துவதற்கான தூதரகக் குறிப்பை டெல்லிக்கு அனுப்பியதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார். இந்த தகவல், வங்கதேசத்தின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உறவுகள் குறித்த சிக்கல்களை வெளிப்படுத்துகிறது.